தமிழகம்

பிரதமர் மீது சரத்குமார் விமர்சனம்: பேரவையில் காங். வெளிநடப்பு

செய்திப்பிரிவு

தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், பிரதமர் மன்மோகன் சிங்கை விமர்சித்துப் பேசியதால், காங்கிரஸ் உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டினை இந்தியா முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தி, முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த தீர்மானம், சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக தனித் தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதல்வர் ஜெயலலிதா, "காமன்வெல்த் கூட்டமைப்பு மாநாட்டில், இந்தியாவின் சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் பங்கேற்க வழி வகுத்துள்ள மத்திய அரசின் முடிவு தமிழர்களின் உணர்வுகளை காலில் போட்டு மிதிப்பதற்கு சமம் ஆகும். மத்திய அரசின் இந்த முடிவை தமிழக மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது உறுதி" என்று காட்டமாகப் பேசினார்.

அதைத் தொடர்ந்து, காமன்வெல்த் மாநாட்டினை இந்தியா முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் தனித் தீர்மானத்தின் மீது கட்சித் தலைவர்கள் பேசினர்.

அப்போது பேசிய அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், பிரதமர் மன்மோகன் சிங்கின் செயல்பாட்டை விமர்சித்து, அவரை 'பேசாத பிரதமர்' என்று குறிப்பிட்டார்.

அதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து குரல் எழுப்பிய காங்கிரஸ் உறுப்பினர்கள், பிரதமர் குறித்து சரத்குமார் பேசிய வாசகத்தை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரினர்.

அதற்கு சபாநாயகர் பதிலளித்தபோது, "நீங்கள் பேசும்போது, அவர் பேசும் பிரதமர்தான் என்று தெரிவியுங்கள். அதுவும் அவை குறிப்பில் ஏற்றுக்கொள்ளப்படும்" என்று கூறினார். இதைத் தொடர்ந்து, சரத்குமார் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

SCROLL FOR NEXT