தமிழகத்திலேயே முதல்முறையாக கோவையில் முழுக்க முழுக்க தனியார் பங்களிப்போடு உயர்தர தொழில் நிறுவனங்களுக்கான தொழில் பூங்கா அமைக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழகத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வளர்ச்சிக்காக சிட்கோ, உயர்தர, பெருதொழில் பிரிவுகளுக்காக சிப்காட் ஆகியன இயங்கி வருகின்றன. தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட இந்த திட்டமானது, தற்போது முதல் முறையாக தனியார் மூலம் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவையில் கொடிசியா தொழில் கண்காட்சி விழாவில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவையில் தனியார் தொழில்பூங்கா அமைக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
தமிழக அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை முதன்மைச் செயலர் மங்கத்ராம் சர்மா ‘தி இந்து’விடம் இதுகுறித்து கூறியதாவது:
‘‘கோவை மாவட்டம் மோப்பிரிபாளையத்தில் 225 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் போன்ற உயர் தொழில் நிறுவனங்களுக்கான தொழில் பூங்கா வளாகம் அமைக்கப்பட உள்ளது. நிலத்தை வகை மாற்றம் செய்யவும், திட்டத்தை தொடங்கவும் ஒப்புதல் வழங்கியுள்ள தமிழக அரசு, முதல்கட்டமாக ரூ.10 கோடி நிதி அளிக்க உள்ளது. இந்த தொழில் பூங்காவில் சுமார் 350 நிறுவனங்கள் இடம் பெறும்.
இதுதவிர கோவை மாவட்டம் கள்ளபாளையத்தில் 200 தொழில் நிறுவனங்கள் இடம் பெறும் வகையில் சிட்கோ போன்ற தொழில் பூங்கா அமைக்கும் திட்டமும் அரசின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் தொழில் பூங்காக்களை அமைத்து, அதன் மூலம் அங்குள்ள சிறு, குறு நடுத்தர தொழில்நிறுவனங்களை மேம்படுத்தும் திட்டமும் முன்வைக்கப்பட்டுள்ளது. விருதுநகரில் ரூ.10 கோடியில் ஜவுளித்துறை பூங்காவும் அமைக்கப்பட உள்ளது’’ என்றார்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ‘‘கோவையில் தொடங்கப்பட உள்ள தொழில்பூங்கா திட்டம் பல மாநிலங்களுக்கு முன்னோடித் திட்டமாக இருக்கும். இதன் மூலம் தொழில் முனைவோர்களையும், சிறுதொழில் நிறுவனங்களையும் ஊக்குவிக்க முடியும். தொழில் வளர்ச்சியில் ஓர் இடத்தை மேம்படுத்த ஒரு ஏக்கருக்கு ரூ.20 லட்சம் வரை செலவாகும். 200 ஏக்கர் கொண்ட தொழில் பூங்கா எனும்போது இந்த செலவு பல மடங்கு அதிகமாகும். தொழில் பூங்கா அமைக்க தனியாரை அனுமதிப்பதன் மூலம் அரசுக்கு செலவும் நேரமும் குறையும்’’ என்றனர்.