தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் புதிய நீதிபதியாக ஜான் மைக்கேல் டி'குன்ஹா பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை முறைப்படி பொறுப் பேற்றார்.
முதல்நாளிலேயே இவ்வழக்கு குறித்த பல்வேறு ஆவணங்களை ஆராய்ந்தார். இன்னும் ஆறே மாதத்தில் அவர் தீர்ப்பு வழங்கக்கூடும் என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
நீதிபதி எம்.எஸ். பாலகிருஷ்ணா கடந்த செப்டம்பர் 30-ம் தேதி ஓய்வு பெற்றதை தொடர்ந்து, ஜெயலலிதாவின் வழக்கை விசாரிக்க நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா-வை அக்டோபர் 31-ம் தேதி கர்நாடக அரசு நியமித்தது.
வியாழக்கிழமை காலை 11.35 மணிக்கு ஜெயலலிதாவின் வழக்கு நடைபெற்றுவரும் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் முறைப்படி பொறுப் பேற்றார் ஜான் மைக்கேல் டி'குன்ஹா .
ஜெயலலிதா வழக்கை விரைவாக முடிக்க சொல்லி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால், பதவியேற்ற முதல் நாளே தனது வேலையை தொடங்கினார். வழக்கு குறித்த பல்வேறு ஆவணங்களை வாசித்து குறிப்பெடுத்துக்கொண் டார். இவ்வழக்கின் விசார ணையை 80 சதவீதம் முடித்த நீதிபதி பி.எம். மல்லி கார்ஜூனய்யா எழுதி வைத்திருந்த குறிப்புகளை முதலில் வாசித்தார். அதன் பிறகு குற்றம் சாட்டப்பட்ட வர்களிடமும், சாட்சிகளி டம் விசாரணை செய்து, வழக்கை இறுதிக் கட்டத் திற்கு நகர்த்திய நீதிபதி எம்.எஸ். பாலகிருஷ்ணா எழுதி வைத்திருக்கும் குறிப்புகளையும் வாசித்தார். வியாழக் கிழமை மாலை 5 மணி வரை வழக்கு குறித்த முக்கிய ஆவணங்களை வாசித்த நீதிபதி வீட்டிற்கு செல்லும் போதும், வழக்கு குறித்த கோப்புகளை கையோடு எடுத்து சென்றார்.
ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் 98 சதவீத விசாரணைகள் முடிந்துவிட்டன.
இன்னும் அரசு வழக்கறிஞர் பவானி சிங்கின் இறுதி வாதம் மட்டுமே இருப்பதால், ஆறே மாதங்களில் தீர்ப்பு வழங்க நீதிபதி டி'குன்ஹா திட்டமிட்டு இருப்பதாக சிறப்பு நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குன்ஹா முன்னிலையில் இம்மாதம் 21-ம் தேதி ஜெயலலிதா வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.