தமிழகம்

சட்டப்பேரவை துளிகள்... அமைச்சர் வேகத்துக்கு அவரது துறையின் செயல்பாடு இல்லை

செய்திப்பிரிவு

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், மருத்துவமனைகள் அமைப்பது தொடர்பாக பதிலளித்துக் கொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், ‘‘அமைச்சர் வேகத்துக்கு அவரது துறையின் செயல்பாடு இல்லை’’ என்றார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர், ‘‘முதல்வர் வேகத்துக்கு அமைச்சர்களும், அமைச்சர்கள் வேகத்துக்கு துறைகளின் செயல்பாடுகளும் உள்ளன. வேகமாக செயல்படுவது குறித்து ஜெயலலிதா எங்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளார்’’ என்றார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் முகம்மது அபுபக்கரின் கேள்விக்கு பதிலளித்த உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ‘‘கேரளத்தில் இருந்து கழிவுகளை கொண்டுவந்து தமிழகப் பகுதிகளில் கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஜே.ஜி.பிரின்ஸ், ‘‘நீட் தேர்வு காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்படவில்லை. மத்திய அரசுக்கு பயப்படாமல் தமிழக அரசு செயல்பட வேண்டும்’’ என்றார். அதற்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, ‘‘தமிழக அரசு யாருக்கும் பயப்படவில்லை’’ என்றார்.

ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்களான க.பாண்டியராஜன், சின்ராஜ் உள்ளிட்டோர் மற்ற அதிமுக எம்எல்ஏக்களுடன் சகஜமாக பேசிக் கொண்டிருந்தனர்.

SCROLL FOR NEXT