எம்ஜிஆர் உறவினர் விஜயன் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பானுமதி தாக்கல் செய்துள்ள மேல்முறையீ்ட்டு மனுவுக்கு செப்டம்பர் 23-ம் தேதிக்குள் சிபிசிஐடி போலீஸார் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2008 ஜூன் 4-ம் தேதி சென்னை கோட்டூர்புரம் பாலம் அருகே காரில் சென்று கொண்டி ருந்த விஜயன் கூலிப்படையி னரால் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக விஜயனின் மனைவி சுதா கொடுத்த புகாரின்பேரில் அபிராமபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி விஜயனின் மனைவி சுதாவின் தங்கையான பானுமதி, அவருக்கு உதவிய போலீஸ் தலைமை காவலர் கருணா, கூலிப்படையைச் சேர்ந்த எம்.கார்த்திக், தினேஷ்குமார், ஆர்.கார்த்தி, சுரேஷ், சாலமன், வெங்கடேசன், பானுமதியின் தோழி புவனா ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்தனர். இதில் ஆசிரியை புவனா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார். வெங்கடேசன் போலீஸ் தரப்பு சாட்சியாக மாறினார். இந்த வழக்கை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் பானுமதி, கருணா உள்ளிட்ட 7 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பானுமதி மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி கள் ஏ.செல்வம், பொன்.கலையர சன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இதுதொடர்பாக செப்டம்பர் 23-ம் தேதிக்குள் சிபிசிஐடி போலீஸார் பதிலளிக்க உத்தரவிட்டனர்.