தமிழகம்

விஜய் ரசிகர் மன்ற தலைவர் கடத்திக் கொலை: சந்தேகத்தின்பேரில் 3 பேர் கைது

செய்திப்பிரிவு

விஜய் மக்கள் இயக்க காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கடத்திக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

விஜய் மக்கள் இயக்கத்தின் காஞ்சி மாவட்டத் தலைவராக இருந்தவர் இமயம் ரவி(40). கடந்த வியாழக் கிழமை ‘பைரவா’ திரைப்படம் வெளியானது. இதுதொடர்பாக ரசிகர் மன்ற பணிகளைக் கவனிக்க இமயம் ரவி புதன்கிழமை காஞ்சிபுரம் வந்திருந்தார். அப் பணிகளை முடித்துவிட்டு அவர் நள்ளிரவு 12 மணியளவில் பேருந்து நிலையம் செல்வதற்கு மூங்கில் மண்டபம் அருகே காத்திருந்தார்.

அப்போது அங்கு வந்த ஆட்டோவில் பேருந்து நிலையம் செல்வதற்கு ரவி ஏறியுள்ளார். அந்த ஆட்டோவில் வந்தவர்கள் ரவியின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாகச் சொல்லப்படுகிறது.

கொலை செய்யப்பட்ட இமயம் ரவி அணிந்திருந்த நகை மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு அவரது சடலத்தை ஓரிக்கை பகுதியில் உள்ள பாலாற்றில் வீசிவிட்டுச் சென்றுவிட்டதாக தெரியவருகிறது.

மறுநாள் காலையில் ஒரு ஆண் சடலம் பாலாற்றில் கிடப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வந்தனர்.

கொலை வழக்கில் ஓரிக்கை, மாரியம்மன் கோயில் தெரு பகுதியைச் சேர்ந்த பாபு(25), காஞ்சிபுரம் பல்லவன் நகர் பகுதியைச் சேர்ந்த லவகுமார் என்கிற சீனுவாசன்(26), ஓரிக்கை பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் பரத் ராஜா என்கிற அப்பு(19) ஆகிய மூவரையும் போலீஸார் நேற்று கைது செய்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT