கோவை மாநகரில் வாகனச் சோதனையின்போது பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை காவல் நிலையம் கொண்டு செல்வதற்கு பதிலாக, தனியார் இருசக்கர வாகன நிறுத்துமிடத்துக்கு கொண்டு சென்று நிறுத்தப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர் பாதிக்கப்பட்ட வாகன ஓட்டிகள்.
வாகனத்துக்கு தகுந்த ஆவணங்கள் இல்லாமல் இருத்தல், குடிபோதையில் வாகனம் ஓட்டிச் செல்வது உள்ளிட்ட காரணங்களுக்காக வாகன ஓட்டிகள் மீது சட்டரீதியான நடவடிக்கையை போலீஸார் மேற்கொள்கின்றனர்.
இதில், மாநகரில் போக்குவரத்து போலீஸார் நடத்தும் வாகனச் சோதனையின்போது ஒருசில இடங்களில் மட்டுமே, உடனடி அபராதம் (ஸ்பாட் ஃபைன்) இ-திட்டம் மூலமாக வசூலிக்கப்படுகிறது. இரவு நேரங்களில் விதிமீறும் வாகன ஓட்டிகள், நீதிமன்றம் சென்று அபராதம் செலுத்திவிட்டு அதற்கான ரசீதை காட்டும்வரை போலீஸார் தங்களது கட்டுப்பாட்டில் வாகனங்களை வைத்திருக்கும் நடைமுறையை கையாண்டு வருகின்றனர்.
செல்ஃபோன் பேசிக் கொண்டு ஓட்டுதல், அதிவேகத்தில் இயக்கி வருதல் உள்ளிட்ட ஏனைய போக்குவரத்து விதிகளுக்காக கூட வாகனங்களை பறிமுதல் செய்து எடுத்துச் செல்வது சரியான நடவடிக்கை இல்லை என சட்ட வல்லுநர்களால் தொடர்ந்து சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது. இருப்பினும், இந்த விதி மீறல்களுக்கு குற்றப்பத்திரிகை (சார்ஜ் சீட்) நகலை கொடுத்து அனுப்பி கட்டச் சொல்லாமல், அபராதம் கட்டும் வரை வாகனத்தை போலீஸார் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை வழக்கமாக கடைபிடிப்பதாகவும், இது சட்ட விதிகளுக்கு புறம்பானது எனவும் கூறுகின்றனர் சட்ட வல்லுநர்கள். இவ்வாறு, போக்குவரத்து விதிமீறல் குற்றத்துக்காக பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள், அந்தந்த காவல் நிலையங்களின் கட்டுப்பாட்டில்தான் வைத்திருக்க வேண்டும். ஆனால், பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள், தனியார் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.
அபராதத் தொகையை கட்டிவிட்டு, போலீஸார் சுட்டிக்காட்டும் சம்பந்தப்பட்ட வாகன நிறுத்தத்துக்குச் சென்று, வாகன நிறுத்தக் கட்டணத்தை செலுத்திவிட்டு எடுத்துச் செல்ல வேண்டி இருப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர் வாகன ஓட்டிகள்.
பாதிக்கப்பட்ட வாகன ஓட்டிகள் சிலர் கூறும்போது, ‘பொதுஇடங்களில் விதிகளுக்கு புறம்பாக நிறுத்திச் செல்லப்படும் வாகனங்களை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் போலீஸார், அதனை நேராக தனியார் வாகன நிறுத்துமிடங்களுக்கு கொண்டு செல்கின்றனர். சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு, பறிமுதல் செய்யப்பட்டதை முறையாக தெரிவிப்பதும் இல்லை. நீண்ட அலைக்கழிப்புக்கு பின்னரே வாகனங்களை வெளியே கொண்டு வர முடிகிறது. இந்த விஷயத்தில் காவல் ஆணையர் தலையிட்டு தீர்வு காண வேண்டும்’ என்றனர்.
இந்த புகார் குறித்து காவல் துணை ஆணையர் லட்சுமி கூறும்போது, "மதுபோதையில் வாகனம் ஓட்டி வரும் வாகன ஓட்டிகளிடம் இருந்து வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். அந்த நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது. மற்றபடி, தனியார் ஸ்டாண்ட்களுக்கு வாகனங்கள் எடுத்துச் செல்லப்படுவது இல்லை. இது போன்ற புகார் எங்களுக்கு வரவில்லை. இருந்தாலும், இது குறித்து கவனிக்கப்படும்" என்றார்.