காசோலை மோசடி வழக்கில் காங்கிரஸ் முன்னாள் எம்பி இரா.அன்பரசுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த சினிமா பைனான்சியர் முகுல்சந்த் போத்ரா, ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் முன்னாள் காங்கிரஸ் எம்பி அன்பரசுக்கு எதிராக காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார். அதில், ‘ராஜீவ் காந்தி நினைவு கல்வி அறக்கட்டளை நிர்வாகிகளான காங்கிரஸ் முன்னாள் எம்பி இரா.அன்பரசு, அவரது மனைவி கமலா, மணி உள்ளிட்டோர் அறக்கட்டளையின் சார்பில் ரூ.35 லட்சத்தை கடந்த 2002-ம் ஆண்டு கடனாக வாங்கினர். அந்தத் தொகையை திருப்பிக் கேட்டபோது கடந்த 2006-ல் காசோலை வழங்கினர். அந்த காசோலை பணமின்றி திரும்பியது. பலமுறை அவர்களிடம் கேட்டும் பணத்தை திருப்பித் தரவில்லை. எனவே, அன்பரசு உள்ளிட்டோர் மீது காசோலை மோசடி சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஜார்ஜ் டவுன் நீதிமன்றம், இரா.அன்பரசு, கமலா அன்பரசு, மணி ஆகியோருக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேலும், கடன் தொகையான ரூ.35 லட்சத்தை வட்டியுடன் வழங்கவும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து அன்பரசு தரப்பில் சென்னை 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.சாந்தி, ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்து, அன்பரசு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு விசாரணையின்போது கமலா இறந்துவிட்டதால், இரா.அன்பரசு, மணி ஆகியோருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்க சம்பந்தப் பட்ட குற்றவியல் நடுவருக்கும் நீதிபதி உத்தரவிட்டார்.