கார் டிரைவரை கடத்திக் கொன்ற 5 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
பொள்ளாச்சியில் ஜெகன் என்பவருக்கு சொந்தமான வாடகை காரின் டிரைவராக ஜான் தாமஸ் இருந்தார். கடந்த 17.7.2007ல் ஜான் அந்தோணிசாமி என்பவர் பொள்ளாச்சியில் இருந்து முள்ளுப்பாடி செல்ல ஜான் தாமஸின் காரை வாடகைக்கு எடுத்தார். மனைவியிடம் சவாரி செல்வதாக கூறிவிட்டுச் சென்ற ஜான் தாமஸ் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. போலீஸார் பல இடங்களில் அவரைத் தேடினர்.
அதன்பிறகு 5 மாதங்கள் கழித்து போலீஸாருக்கு கிடைத்த ஒரு கடிதம் மூலமாக, காரை வாடகைக்கு எடுத்த ஜான் அந்தோணி சாமி, முத்து மாணிக்கம், ஆர்.கணேஷ்குமார், ராஜேஷ் குமார், எஸ்.காளீஸ்வரன் ஆகிய 5 பேரும் ஜான் தாமஸைக் கொன்று காரை திருடியது தெரியவந்தது.
இவ்வழக்கை விசாரித்த கோவை சிறப்பு அமர்வு நீதிமன்றம், 5 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து 5 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.பாரதிதாசன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘‘இந்த குற்ற சம்பவம் கார் டிரைவரைக் கொலை செய்துவிட்டு, காரை கடத்த வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று. சாட்சி மற்றும் சான்று களின் அடிப்படையில் கீழ் நீதிமன்றம் சரியான தீர்ப்பைத்தான் தந்துள்ளது. எனவே குற்றம் சாட்டப்பட்ட 5 பேருக்கும் கீழ் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை நாங்களும் உறுதி செய்கிறோம்” எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.