தமிழகம்

தமிழகத்தில் மீண்டும் கிரெடிட் கார்டு மோசடி: வங்கி மேலாளர் பேசுவதாக கூறி சென்னை கார்டில் நொய்டாவிலிருந்து பணம் சுருட்டல்

செய்திப்பிரிவு

வங்கி மேலாளர் பேசுவதாக கூறி போன் மூலம் ஏடிஎம் கார்டின் ரகசிய எண்ணை தெரிந்து கொண்டு மோசடி செய்யும் சம்பவம் சென்னையில் மீண்டும் நடந்துள்ளது.

வங்கி மேலாளர் பேசுவதாக கூறி வாடிக்கையாளர்களின் ஏடிஎம் கார்டின் ரகசிய எண்ணை பெற்று மோசடி செய்யும் கும்பலின் கைவரிசை தமிழகத்தில் தொடர்கதையாகி உள்ளது. பாதிக்கப்படுபவர்களில் பலர் போலீஸில் புகார் அளிக்கின்றனர். சிலர் புகார் அளித்தால் அவமானம் என நினைத்து யாரிடமும் சொல்லாமல் மனதுக்குள்ளேயே புலம்பி வருகின்றனர். தற்போது மேலும் ஒரு மோசடி நடந்துள்ளது.

தாம்பரத்தை சேர்ந்தவர் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் 2 தினங்களுக்கு முன் எழும்பூரில் உள்ள அலுவலகத்துக்கு மின்சார ரயில் மூலம் வந்துள்ளார். காலை 8.45 மணிக்கு அவரது செல்போனுக்கு 86768 61613 என்ற எண்ணிலிருந்து அழைப்பு வந்துள்ளது.

எதிர் முனையில் ஹிந்தி கலந்த ஆங்கிலத்தில் பேசியவர், “டெல்லி அருகில் உள்ள நொய்டாவிலிருந்து இந்தியன் வங்கி மேலாளர் பேசுகிறேன். உங்களது ஏடிஎம் கார்டை புதுப்பிக்க வேண்டும். எனவே, கார்டின் பின்புறமுள்ள (சிவிவி எண்) 3 இலக்க எண்ணை தெரிவியுங்கள்.

ரகசிய பின் (பாஸ்வேர்டு) எண்ணை யார் கேட்டாலும் சொல்லி விடாதீர்கள். போலி கார்டு தயார் செய்து மோசடி செய்து பணத்தை திருடி விடுவார்கள். எனவே, 3 இலக்க எண்ணை மட்டும் தெரிவியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

இதனால், உண்மையிலேயே வங்கி மேலாளர்தான் பேசுவதாக நினைத்த குமார் கார்டின் பின்புறம் உள்ள 3 இலக்க எண்ணை தெரிவித்துள்ளார். கார்டின் முன்புறம் உள்ள 16 இலக்க எண்ணையும் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து போன் இணைப்பு துண்டிக்கப் பட்டுள்ளது. அடுத்த சில நிமிடங்களில் குமாரின் வங்கி கணக்கிலிருந்து ரூ.9,999 மற்றும் ரூ.2,900 கழிக்கப்பட்டதாக செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குமார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸார் கூறும்போது, “குமாரின் பெயர், அவர் எந்த நிறுவனத்தில் பணி செய்கிறார் என்ற விவரம் மோசடி கும்பலுக்கு தெரிந்துள்ளது. எனவே, மோசடி கும்பலுக்கும் சம்பந்தப்பட்ட வங்கிக் கிளையில் பணி செய்யும் ஊழியர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்று விசாரிக்க உள்ளோம்” என்றனர்.

தடுக்கும் யோசனைகள்

கிரெடிட், டெபிட் கார்டின் பின் நம்பரை ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும். கார்டை மற்றவர்கள் பயன்படுத்த கொடுக்கக் கூடாது. கார்டின் நம்பரை யாரும் எழுதவோ, நகல் எடுக்கவோ அனுமதிக்கக் கூடாது. போன் மூலம் கார்டின் விவரங்களை யார் கேட்டாலும் தெரிவிக்கக் கூடாது என சைபர் கிரைம் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT