தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இடைத்தரகர் சுகேஷிடம் போலியான மாநிலங் களவை உறுப்பினர் அடையாள அட்டை இருந்ததை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். இதை யடுத்து அவர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரட்டை இலை சின்னம் பெற..
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணை யத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக அதிமுக அம்மா கட்சி துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், ஹவாலா தரகராக செயல்பட்ட நரேஷ் என்ற நாதுசிங், லலித் பாபுபாய் ஆகியோரை டெல்லி போலீஸார் கைது செய்து திஹார் சிறையில் அடைத்தனர்.
இதில் டிடிவி தினகரன், மல்லிகார்ஜுனா, நரேஷ், லலித் பாபு ஆகியோருக்கு ஜாமீன் வழங் கப்பட்டது. ஆனால், இந்த வழக்கில் முதலில் கைது செய்யப்பட்ட சுகேஷுக்கு மட்டுமே இதுவரை ஜாமீன் வழங்கப்படவில்லை. மே 22, ஜூன் 9 ஆகிய தேதிகளில் 2 முறை சுகேஷின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், 3-வது முறையாக சுகேஷின் வழக்கறிஞர் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி பூனம் சவுத்ரி, மீண்டும் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும் ஒரு வழக்கு
இதற்கிடையே, சுகேஷ் வீட் டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை போலீஸார் ஆய்வு செய்தபோது, மாநிலங்களவை உறுப்பினர் என்ற பெயரில் போலியாக அடையாள அட்டை ஒன்று சிக்கியது. இதை சுகேஷ் பலமுறை பயன்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து சுகேஷ் மீது கூடுதலாக ஒரு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் 467-வது பிரிவின்கீழ் (உச்ச பாதுகாப்பு மிகுந்த இடத்தில் போலி அடையாள அட்டை தயார் செய்தல்) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பிரிவின் கீழ் ஆயுள் தண்டனை வரை விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.