வேலூர் மாவட்டத்தில் நடப் பாண்டின் அதிகபட்ச வெயில் அளவாக நேற்று 111.4 டிகிரி பாரன் ஹீட் பதிவானது.
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் இந்த ஆண்டு அதிகரித்து காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. பொதுவாக தமிழகத்தில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகரித்து காணப்படும் வெயில் அளவு இந்த ஆண்டு மார்ச் முதல் வாரத்திலேயே கொளுத்தத் தொடங்கியது.
மார்ச் மாதத்தை தொடர்ந்து ஏப்ரல் 1-ம் தேதி முதல் 100 டிகிரியை தாண்டிய வெயில் அளவு, ஏப்ரல் 17-ம் தேதி 110.3 டிகிரியை தொட்டு நடப்பாண்டின் அதிகபட்ச வெயில் அளவாக பதிவானது. அதன்பிறகு படிப்படி யாக வெயில் அளவு குறைந்தே காணப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டின் உச்சபட்ச வெயில் அளவாக நேற்று 111.4 டிகிரி வெயில் அளவு பதிவானது.
வேலூர் மாவட்டத்தில் கோடை வெயிலை சமாளிக்க முடியாமல் தவித்த மக்கள் கோடை மழை பெய்யாதா? என எதிர்பார்த்தபோது, கடந்த வாரம் வேலூர் மாவட்டத்தில் சில இடங்களில் லேசான மழை பெய்தது. இது மக்களுக்கு சற்று ஆறுதலைக் கொடுத்தாலும், அடுத்தடுத்த நாட்களில் வெயி லின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. இதனால், இரவில் புழுக்கம் அதிகரித்து காணப்பட்டது. வெயிலுக்குப் பயந்து பகல் நேரங்களில் வெளியே வருவதை பெரும்பாலோர் தவிர்த்து வருகின்றனர்.
அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும்போது, கத்திரி வெயிலை எவ்வாறு? சமாளிப்பது என்ற கலக்கம் பொதுமக்கள் மனதில் எழுந் துள்ளது. ஏற்கெனவே வறட்சி மாவட்டமான வேலூரில் கோடை வெயிலால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து பல இடங்களில் குடிநீர் பஞ்சம் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், திருவண்ணா மலையில் நேற்று 107 டிகிரி வெயில் அளவு பதிவானது.