தமிழகம்

தமிழகத்தில் பினாமி அரசா?- கருணாநிதி மீது ஓ.பி.எஸ். தாக்கு

செய்திப்பிரிவு

தமிழகத்தில் 'பினாமி' அரசு நடைபெற்று வருவதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியதற்கு, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடுமையாக சாடியுள்ளார்.

மேலும், சட்டப்பேரவையின் மாண்புக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் தி.மு.க.வினர் நடந்து கொண்டால் அதற்குரிய பலனை அவர்கள் பெறுவர் என்று அவர் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தி.மு.க. தலைவர் கருணாநிதியும், தலைவர் பதவிக்கு, இலவு காத்த கிளியாய் காத்துக் கொண்டிருக்கும் தனயன் மு.க.ஸ்டாலினும் தற்போது நடைபெற்று வரும் அரசை, பினாமி அரசு என்று தொடர்ந்து குறிப்பிட்டு வருகின்றனர்.

கருணாநிதிக்கு ஏற்பட்டுள்ள குழப்பத்தின் காரணமாகத் தான் அவர், இந்த அரசை பினாமி அரசு என்று கூறியுள்ளார் எனத் தெளிவாகிறது.

பினாமி என்ற வார்த்தையின் உண்மையான அர்த்தம் விற்பனையாளர் அல்லது வாங்குபவர் அல்லாது வேறு ஒருவரின் பெயரில் செய்யப்படும் விற்பனை அல்லது வாங்குதல் என்பதாகும். எனவே, ‘பினாமி’ என்பதன் பொருள் என்ன என்பதை கருணாநிதி யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

அரசு என்பதும், முதலமைச்சர் பதவி என்பதும் உரிமை பற்றியது அல்ல; அது கடமை பற்றியது என்பது கடமை உணர்வு உள்ளவர்களுக்குத் தான் புரியும்.

முந்தைய மைனாரிட்டி திமுக ஆட்சியில் பல்வேறு அதிகார மையங்கள் இருந்தன என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவர். கருணாநிதியும், ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும், ஒவ்வொரு அதிகார மையங்களாக செயல்பட்டார்கள் என்பதும், இந்த அதிகார மையங்கள் காவல் துறையினருக்கே பல்வேறு முரண்பாடான உத்தரவுகளை பிறப்பித்தன என்பதும் நாடறிந்த உண்மை. அவ்வாறு .கருணாநிதி ஆட்சி நடத்தியதால் தான் தமிழக மக்கள் தி.மு.க.வை தூக்கி எறிந்தனர் என்பது அனைவருக்கும் தெரியும். கருணாநிதியின் ஆட்சியில் பல்வேறு அதிகார மையங்கள் இருந்ததால் தான் அதே நினைவில் தற்போதும் அதிகாரங்கள் பற்றி கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.

தனது தனயனுக்காக கருணாநிதி உருவாக்கிய துணை முதல்வர் என்ற பதவி இந்திய அரசமைப்புச் சட்டத்திலோ, அரசின் அலுவல் விதிகளிலோ இல்லையே? அப்படியென்றால் பினாமி முதல்வராக ஸ்டாலினை கருணாநிதி நியமித்தாரா? மூத்த அமைச்சர் க.அன்பழகன் கோப்புகளைப் பார்த்தபின் துணை முதல்வருக்கு கோப்புகள் சமர்ப்பிக்கப்படுவது பற்றி பிரச்சனை ஏற்பட்டு, சமாதான நடவடிக்கையாக நிதியமைச்சர் பார்க்க வேண்டிய கோப்புகளை துணை முதல்வர் பார்த்தபின் நிதியமைச்சருக்கு அனுப்பப்படலாம் என்ற வேடிக்கை உத்தரவை பிறப்பித்தவர் தான் கருணாநிதி.

மு.க.ஸ்டாலின் ஒரு விழாவில் பேசும் போது, வழக்கம் போல எதிர்கட்சிகளை வெளியே தூக்கிப் போடாமல், மக்கள் பிரச்சனை குறித்து பேச அனுமதி கிடைக்கும் என்று தான் நினைப்பதாகத் தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சிகளுக்கு உரிய மரியாதை அளித்து, அவர்களது வாதங்களை கேட்டு, அவர்களது வினாக்களுக்கு தகுந்த பதில் அளிப்பது; எதிர்கட்சியினரின் கருத்துகள் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருப்பின், அவற்றை ஏற்றுக் கொள்வது என்ற மிக உயர்ந்த ஜனநாயக கோட்பாட்டில் மிகுந்த நம்பிக்கை உள்ளவர் ஜெயலலிதா.

எனவே தான் சட்டமன்றத்தில் எதிர்கட்சிகள் நியாயமான ஆலோசனைகளை வழங்கியபோது சிறிதும் தாமதிக்காமல் உடனேயே அவற்றை ஏற்றுக் கொள்வதாக பல நேரங்களில் அவர் அறிவித்துள்ளார்.

சட்டமன்றத்திற்கு வருவதே குழப்பம் விளைவிப்பதற்கும், சபை நடவடிக்கைகளுக்கு குந்தகம் ஏற்படுத்துவதற்கும், பொய் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுவதற்கும், சட்டப் பேரவைத் தலைவர் இருக்கைக்கு முன் அமர்ந்து போராடுவதற்கும், சட்டப் பேரவைத் தலைவரின் ஆணைகளுக்கு கட்டுப்படாமல் மற்ற உறுப்பினர்களை பேச விடாமல், இடையூறு ஏற்படுத்தி கூச்சல் குழப்பம் விளைவிப்பதற்கும் தான் என்ற அடிப்படையில் செயல்படும் தி.மு.க. உறுப்பினர்களை சட்டப் பேரவைத் தலைவர் வெளியேற்றாமல், சட்டமன்றத்தை எவ்வாறு நடத்த இயலும்? சட்டமன்றத்தின் மற்ற உறுப்பினர்களின் உரிமைகளை பாதுகாப்பது எங்ஙனம்? சட்டமன்றத்திற்கே வராத கருணாநிதி தவிர்த்து எஞ்சிய தி.மு.க.வின் 22 உறுப்பினர்கள் சட்டமன்றத்தின் மாட்சிமையையே பிணையத்திற்கு உள்ளாக்கும் போது சட்டமன்றத்தின் மாட்சிமையை மீட்டு எடுக்க வேண்டியது சட்டப் பேரவைத் தலைவரின் கடமை அல்லவா?

தற்போது நான் விரிவாக அளித்துள்ள விளக்கத்தை திரு.கருணாநிதியும், திரு.மு.க.ஸ்டாலினும் நன்கு படித்து புரிந்து கொண்டால் அஇஅதிமுக அரசு, பெரும்பான்மை அரசு, அதாவது மெஜாரிட்டி அரசு என்பது புரிய வரும். சட்டப் பேரவையில் எவ்வாறு நடந்து கொள்வது என்பதை உணர்ந்து, அதற்கேற்ப விவாதங்களில் பங்கு பெற்றால், சட்டமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படும்.

அவ்வாறு இல்லாமல் மற்ற உறுப்பினர்களின் உரிமையை பறிக்கும் வகையிலும், சட்டப் பேரவையின் மாண்புக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும், தி.மு.க.வினர் நடந்து கொண்டால் அதற்குரிய பலனைத் தான் அவர்கள் பெறுவர் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT