தமிழகம்

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவா? எதிர்ப்பா? - இன்று அறிவிக்கப்படும் என திருநாவுக்கரசர் தகவல்

செய்திப்பிரிவு

சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பின்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வாக்களிப்பதா? எதிராக வாக்களிப்பதா? என்பதை இன்று காலை 9 மணிக்கு அறிவிக்கப் போவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் உத்தரவுப்படி முதல் வர் எடப்பாடி பழனிசாமி சட்டப் பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ளார். அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆலோசனைக் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. மாலை 4.30 மணியில் இருந்து சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, கொறடா எஸ்.விஜய தரணி, எம்.எல்.ஏ.க்கள் எச்.வசந்த குமார், ஜே.ஜி.பிரின்ஸ், ஆர்.கணேஷ், எஸ்.ராஜேஷ்குமார் ஆகிய 6 பேர் பங்கேற்றனர். எஸ். பாண்டி (முதுகுளத்தூர்), வி.எஸ். காளிமுத்து (தாராபுரம்) ஆகிய இருவரும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

கூட்டத்துக்குப் பிறகு செய்தி யாளர்களிடம் திருநாவுக்கரசர் கூறியதாவது:

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் சனிக்கிழமை (இன்று) நம்பிக்கை வாக்கெடுப்பு கோர இருக்கிறார். எனவே, இது தொடர்பாக ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. சொந்த ஊரில் இருப்பதால் 2 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கவில்லை.

நம்பிக்கை வாக்கெடுப்பின் போது என்ன நிலை எடுப்பது என்பது தொடர்பாக நீண்ட நேரம் விவாதித்தோம். அனைவரும் தங் களது கருத்துக்களை தெரிவித்த னர். அதனை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி, தமிழகப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் ஆகியோரிடம் தெரிவிப்போம். அவர்களின் வழிகாட்டுதலின்படி என்ன செய்வது என்பதை சனிக்கிழமை காலை 9 மணிக்கு அறிவிப்போம்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் காலை 9 மணிக்கு சத்தியமூர்த்தி பவன் வருவார்கள். அங்கிருந்து சட்டப்பேரவைக்குச் செல்வார்கள். இதுவரை நடந்த முன்னுதாரணங்களின் அடிப்படை யில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வேண்டும் என்பதே காங்கிரஸின் நிலைப்பாடு.

SCROLL FOR NEXT