126 வழக்கறிஞர்களை இடை நீக்கம் செய்து இந்திய பார் கவுன்சில் உத்தரவிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்று தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், ''வழக்கறிஞர்களுக்கான விதிகளில் செய்யப்பட்ட புதிய திருத்தங்கள் குறித்து 5 நீதிபதிகள் கொண்ட குழு முடிவெடுக்கும்வரை யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்த மறுநாளே போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் 126 வழக்கறிஞர்களை இடை நீக்கம் செய்து இந்திய பார் கவுன்சில் உத்தரவு இட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
நிலைமையை இது மேலும் சிக்கலாக்குமே தவிர சுமூகமாகப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உதவாது. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் வழக்கறிஞர்களின் போராட்டத்தின் விளைவாக பொது மக்கள் பெருமளவு பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள்.
இதை உணர்ந்து தலைமை நீதிபதி வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர்களை அழைத்துப் பேசி பிரச்சினையைத் தீர்க்க முன்வரவேண்டும்'' என பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.