வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை கலைஞர் ஒப்புக் கொண்டால், அதில் நியாயமான திருத்தங்களைச் செய்ய முன்வருவாரா என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தி.மு.க. உட்கட்சி மோதல்களின் தொடர்ச்சியாக அக்கட்சியின் தென் மண்டல அமைப்புச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருக்கிறார். இது முழுக்க முழுக்க தி.மு.க.வின் உட்கட்சி விவகாரம் என்பதால் அதுகுறித்து கருத்துக் கூற விரும்பவில்லை. அவ்வாறு கருத்துக் கூறுவது நாகரீகமாகவும் இருக்காது.
அதேநேரத்தில் மு.க. அழகிரி மீதான நடவடிக்கைக்காக அக்கட்சித் தலைமையால் பட்டியலிடப்பட்ட காரணங்களில் முதன்மையானது சமூக பழிவாங்கலுக்கு அடிப்படையாக உள்ள ஒரு விசயத்துடன் சம்பந்தப்பட்டது என்பதால், அது குறித்த தி.மு.க.வின் நிலைப்பாட்டை அறிந்து கொள்வதில் தவறில்லை என்று கருதுகிறேன்.
மதுரை பகுதியில் மு.க. அழகிரியின் ஆதரவாளர்களாக இருந்து மு.க.ஸ்டாலின் அணிக்கு மாறிய சிலர் மீது திடீரென வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அழகிரி அணியில் இருந்த சிலரின் தூண்டுதலால் தான் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்தி வழக்குகள் தொடரப்பட்டதாகக் கூறி சிலர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். அவர்கள் மீதான நடவடிக்கையை கடுமையாக விமர்சித்ததால் தான் அழகிரி நீக்கப்பட்டதாக திமு.க. கூறியிருக்கிறது.
தமிழ்நாட்டில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் சிலரால் தொடர்ந்து தவறாக பயன்படுத்தப்படுவதாகவும், பிடிக்காதவர்களை பழிவாங்கவே இந்த சட்டம் ஏவப்படுவதாகவும் நான் தொடர்ந்து கூறி வருகிறேன்.
அனைத்து சமுதாயத்தினர் மீதும் தவறாக பயன்படுத்தப்படும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் சில நியாயமான திருத்தங்களை செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியதற்காக, நான் சாதிவெறியை கிளப்புவதாக கலைஞர் குற்றஞ்சாற்றினார்.
ஆனால், இப்போது, அதே கலைஞர் அவர்களே, தி.மு.க.வைச் சேர்ந்த சிலர் மீது தி.மு.க.வைச் சேர்ந்த வேறு சிலர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்தி வழக்கு தொடர்ந்திருப்பதாக கூறியிருக்கிறார். இதேபோல் தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படும் ஆபத்து உள்ளதாக மு.க.ஸ்டாலின் அச்சம் தெரிவித்திருக்கிறார்.
இவ்வளவுக்கும் பிறகாவது தமிழ்நாட்டில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறதா, இல்லையா?, ஒருவேளை தவறாக பயன்படுத்தப்படவில்லை என்றால் தி.மு.க.வினர் மீது அளிக்கப்பட்டுள்ள புகார்கள் அனைத்தும் உண்மையா? என்பதை தி.மு.க. தலைவர் கலைஞர் விளக்க வேண்டும்.
வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை கலைஞர் ஒப்புக் கொண்டால், அதில் நியாயமான திருத்தங்களைச் செய்ய முன்வரவேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி போராட முன்வருவாரா? என்பதையும் தெளிவாக தெரிவிக்க வேண்டும்" இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.