தமிழகம்

சென்னை: மீட்டரை திருத்தாத 20 ஆயிரம் ஆட்டோக்கள் மீது கடும் நடவடிக்கை

கி.ஜெயப்பிரகாஷ்

சென்னையில் ஆட்டோ மீட்டர்களை புதிய கட்டண விகிதங்களுக்கேற்ப திருத்த கொடுக்கப்பட்ட கெடு வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்த நிலையில், 20 ஆயிரம் ஆட்டோக்கள் இன்னமும் மீட்டரை திருத்தாமல் இயங்கிக் கொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீட்டரை திருத்தாத ஆட்டோக்கள் மீதும், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள 2.14 லட்சம் ஆட்டோக்களில் சென்னையில் மட்டும் 71 ஆயிரத்து 939 ஆட்டோக்கள் ஓடுகின்றன. சென்னையில் உள்ள ஆட்டோக்களுக்கு புதிய கட்டண விகிதத்தை ஆகஸ்ட் 25-ம் தேதி அரசு அறிவித்தது. புதிய கட்டணத்துக்கேற்ப மீட்டர்களை திருத்தி அமைக்க, அக்டோபர் 15-ம் தேதி வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. ஆனாலும் பெரும்பாலான ஆட்டோக்கள் மீட்டரை திருத்தி அமைக்கவில்லை. இதையடுத்து, நவம்பர் 15-ம் தேதி வரை கெடுவை மீண்டும் நீட்டித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

இந்நிலையில், அரசு விதித்த காலக்கெடு வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்தது. இதுவரை சுமார் 48 ஆயிரத்து 500 ஆட்டோக்களுக்கு மீட்டர் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஆட்டோக்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சென்னையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மூலமாக 65 ஆயிரத்து 445 ஆட்டோக்களுக்கு புதிய கட்டண பட்டியல் வழங்கப்பட்டுள்ளது. அவற்றில், 48,500-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் மீட்டர்கள் திருத்தி அமைக்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் தவணை முறையில் கடன் செலுத்தாத 10 ஆயிரம் ஆட்டோக்களை, நிதி நிறுவனங்கள் பறிமுதல் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது என்றார்.

இது குறித்து தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர்கள் சம்மேளனத்தின் மாநில பொதுச்செயலாளர் ஜே.சேஷசயனம் கூறியதாவது:

அரசு அறிவித்தபடி முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை. இன்னும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்களுக்கு மீட்டர் திருத்தி அமைக்கப்படவில்லை. டாடா மேஜிக், அபே என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் முறைப்படுத்தாமல் இயக்கப்படுகிறது. ஆட்டோ கேஸ் மையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கவில்லை. இதேநிலை தொடர்ந்தால் மீண்டும் பழைய நிலைக்கே சென்றுவிடும். மீட்டர் திருத்துவது தொடர்பான வழக்கு வரும் 18ம் தேதி வருகிறது. இந்த வழக்கின் முடிவை பார்த்த பின்னரே, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT