தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தலைமையில் நேற்று நடைபெற்றது.
கூட்டம் தொடங்கியவுடன், தமிழக விவசாய சங்கங்களின் கூட்டியக்க மாநில துணைத் தலைவர் கக்கரை ஆர்.சுகுமாரன் தலைமையில், சாக்குப் பைகளை அணிந்து வந்த விவசாயிகள், “மத்திய, மாநில அரசுகளால் 6-வது ஆண்டாகத் தொடர்ந்து தமிழக விவசாயிகள் வஞ்சிக்கப்படுகின்றனர். வரலாறு காணாத வறட்சியால் தமிழகத்தின் நெற்களஞ்சியம் வறண்டுவிட்டது. வறட்சியால் பாதித்த நெல், கரும்பு, வாழை, சோளம், தென்னைக்கு, பாதிப்புக்கு ஏற்ப நிவாரணம் வழங்க வேண்டும்.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தால் விவசாயிகளின் பிரச்சினைகள் கண்டுகொள்ளப்படவில்லை. வறட்சி, விவசாயிகளின் தற்கொலை உள்ளிட்ட அசாதாரண சூழ்நிலை நிலவும் இந்த நேரத்தில், புதுக்கோட்டை மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதை உடனே தடுக்க வேண்டும். இல்லையென்றால், விவசாயிகள் ஒன்றாக கூடி அங்கு சென்று தீக்குளிப்போம். விவசாயிகள், விளைந்த நெல்லைத்தான் சாக்குப் பையில் கட்டுவார்கள்.
ஆனால் மத்திய, மாநில அரசுகளின் போக்கால் விவசாயிகளின் உயிரை சாக்கு பையில் கட்டிப்போட வேண்டிய நிலை உள்ளது. இதை, உணர்த்தும் வகையில் விவசாயிகள் சாக்குப் பையை அணிந்து வந்துள்ளோம்” எனத் தெரிவித்து ஆட்சியரை முற்றுகையிட்டனர். தொடர்ந்து, வெளிநடப்பு செய்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட துணைத் தலைவர் வெ.ஜீவக்குமார், காவிரி டெல்டா விவசாயிகள் சங்க மாவட்ட அவைத் தலைவர் ஏ.கே.ஆர்.ரவிச்சந்தர், திமுக தெற்கு மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் பி.கோவிந்தராஜ் உள்ளிட்டோர் தலைமையில் வந்த விவசாயிகள், கழுத்தில் தூக்குக் கயிறை மாட்டியபடி வந்து ஆட்சியரை முற்றுகையிட்டனர்.
அப்போது, “தமிழகத்தில் நிலவும் அரசியல் குழப்பத்தை பயன்படுத்தி, காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு விரோதமாக கர்நாடக அரசு மேகேதாட்டுவில் அணை கட்ட நேற்று ரூ.5 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது. அதை, அனுமதித்தால் காவிரி டெல்டா விவசாயம் முற்றிலும் அழிந்து விடும்.
குடிநீருக்குக் கூட திண்டாட வேண்டிய நிலை ஏற்படும். மின்சார உற்பத்தி பாதிக்கும். மத்திய அரசு இதைத் தடுக்க வேண்டும். மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்ய வேண்டும். வறட்சி மாவட்டம் என்று அறிவிக்கப்பட்டும் 5 போகம் குறுவையும், 1 போகம் சம்பாவும் பொய்த்தும், இதுவரை வறட்சி நிவாரணம் யாருக்கும் வழங்கவில்லை. வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்டு டெல்டா மாவட்டங்களை மத்திய, மாநில உயர்நிலைக் குழு பார்வையிட்டும் எந்தப் பலனும் இல்லை. தமிழக அரசு அறிவித்த சொற்ப நிவாரணமும் யாருக்கும் கிடைக்கவில்லை. விவசாயிகளின் போக்கில் மெத்தனத்தை கடைபிடிக்கும் மத்திய, மாநில அரசுகளால் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய நிலையில் விவசாயிகள் உள்ளனர். அதை உணர்த்தவே கழுத்தில் தூக்குக் கயிற்றை மாட்டி வந்துள்ளோம்” எனக் கூறி, கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சையில் நேற்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்துக்கு, சாக்குப்பை உடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.