கிரானைட் முறைகேடு தொடர் பான 3 வழக்குகளில் பி.ஆர்.பழனிச் சாமிக்கு எதிராக 2,710 பக்க குற்றப் பத்திரிகை மேலூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் நடை பெற்ற பல ஆயிரம் கோடி ரூபாய் கிரானைட் முறைகேடு தொடர்பாக மேலூர், ஒத்தக்கடை, கீழவளவு ஆகிய காவல் நிலையங்களில் 2012 முதல் 2015 வரை 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில், மேலூர் நீதித் துறை நடுவர் மன்றத்தில் 3 வழக்குகளில் குற்றப்பத்திரிகை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. கீழவளவு காவல் நிலையத்துக் குட்பட்ட பகுதிகளில் அரசுக்கு சொந்தமான இடங்களில் சட்ட விரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்து ரூ.886 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக பி.ஆர்.பழனிச்சாமி உள்ளிட்டோர் மீது பதிவு செய்யப்பட்ட இரு வழக்கு களிலும், ஒத்தக்கடையில் பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான நீர்வழிப் பாதையை சேதப்படுத்தி ரூ.1.31 கோடி இழப்பு ஏற்படுத்திய தாக பி.ஆர்.பழனிச்சாமி உள்ளிட் டோர் மீது பதிவான வழக்கிலும் சுமார் 2,710 பக்க குற்றப்பத்திரி கையை மேலூர் நீதித்துறை நடுவர் செல்வக்குமாரிடம் அரசு வழக்கறிஞர் ஆர்.ஷீலா, தனிப் பிரிவு இன்ஸ்பெக்டர்கள் பிர காஷ், ராஜசிங் ஆகியோர் நேற்று தாக்கல் செய்தனர்.