சென்னை மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் இட ஒதுக்கீடு அடிப்படையில் புதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் திறக்கப்பட உள்ள அதி உயர் சிறப்பு மருத்துவமனைக்கான (மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல்) மருத்துவ அதிகாரிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படாதது ஏன்? என்பது குறித்து முதல்வர் ஜெயலலிதா நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
எய்ம்சிலும், ஜிப்மரிலும் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும்போது, புதிதாக தொடங்கப்படும் இந்த மருத்துவமனையில் இடஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை. ஆனால், ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்களை நியமனம் செய்யும்போது இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படாது என்று முதல்வர் கூறியிருக்கிறார்.
இந்த மருத்துவமனைக்கு மருத்துவர்களை தேர்ந்தெடுக்கும் மருத்துவ பணிகள் தேர்வு வாரியம்தான், கடந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி 2,213 மருத்துவர்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்வதற்கான அறிவிக்கையை வெளியிட்டது. அதில், மருத்துவர்கள் நியமனத்துக்கு நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டு விதிகள் பொருந்தும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
ஒரே முதல்வரின் ஆட்சியில், ஒரே ஆண்டில் மார்ச் மாதத்தில் ஒப்பந்த பணி நியமனங்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு, டிசம்பர் மாதத்தில் காணாமல் போனதன் பின்னணி என்ன? என்பதை ஜெயலலிதாதான் விளக்க வேண்டும்.
இந்த மருத்துவமனைக்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் புதிய மருத்துவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.