‘தி இந்து’ தமிழ் நாளிதழில் வெளியான செய்தியைத் தொடர்ந்து தாம்பரம் அடுத்த வேங்கடமங்கலத்தில் பழைய மின்மாற்றி அகற்றப்பட்டு புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது.
தாம்பரம் அடுத்த வேங்கடமங்கலம் பகுதியில் உள்ள வீடுகளுக்கு பேருந்து நிலையம் அருகில் இருந்த 100 கேவி திறன் கொண்ட மின்மாற்றியில் (டிரான்ஸ்பார்மர்) இருந்து மின்பகிர்மானம் செய்யப்பட்டு வந்தது. இந்த பகுதியில் வீடுகள் அதிகரித்து வருவதால், மின் தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்தது. இதனால் மின் விநியோகம் அடிக்கடி தடைப்பட்டது. இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அம்பேத்கர் நகரில் 100 கேவி திறன் கொண்ட மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) அமைக்கப்பட்டது. ஆனால் புதிய மின்மாற்றியை அமைக்காமல், பழைய மின்மாற்றியை அமைத்தனர்.
இதனால் குறைந்த மின் அழுத்தம் காரணமாக வீடுகளில் உள்ள டிவி, மிக்சி, கிரைண்டர், உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதடைகின்றன. அதனால் மின் இணைப்புகளுக்கு ஏற்றவாறு புதிய மின்மாற்றியை அமைக்க வேண்டும். அம்பேத்கர் நகரில் அமைக்கப்பட்ட பழைய மின்மாற்றியை அகற்றிவிட்டு, புதிய மின்மாற்றியை அமைக்க வேண்டும் என்று வேங்கடமங்கலம் மக்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்த செய்தி ‘தி இந்து’ தமிழில் கடந்த 31-ம் தேதி வெளியானது. இதையடுத்து மறைமலை நகர் மின்வாரிய மண்டல பொறியாளர் மாலதி வேங்கடமங்கலத்துக்கு வந்து ஆய்வு செய்தார். அம்பேத்கர் நகரில் புதிய மின்மாற்றிக்கு பதிலாக பழைய மின்மாற்றியை அமைத்த கோட்ட பொறியாளர்களை கண்டித்தார். இங்குள்ள பழைய மின்மாற்றியை மாற்றிவிட்டு உடனடியாக புதிய மின்மாற்றியை அமைக்க உத்தரவிட்டார். மேலும் பேருந்து நிலையம் அருகே உள்ள 100 கேவி திறன் கொண்ட மின்மாற்றியை அகற்றி விட்டு 250 கேவி திறன் கொண்ட மின்மாற்றியை ஒரு வாரத்தில் அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து அம்பேத்கர் நகரில் அமைக்கப்பட்ட பழைய மின்மாற்றியை உடனடியாக அகற்றிவிட்டு, புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது. பேருந்து நிலையம் அருகே உள்ள 100 கேவி திறன் கொண்ட மின்மாற்றியை அகற்றிவிட்டு, 250 கேவி திறன் கொண்ட புதிய மின்மாற்றி அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.