தமிழகம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து நேர்மையான வேட்பாளர்களுக்கு தண்டனை: விஜயகாந்த்

செய்திப்பிரிவு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்தை நேர்மையாக தேர்தல் களத்தில் போட்டியிட விரும்பிய வேட்பாளர்களுக்கு ஒரு தண்டனையாகவே தேமுதிக கருதுகிறது என்று தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் விஜயகாந்த் வேதனை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திங்கட்கிழமை அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது:

ஆரம்பம் முதலே இந்த தேர்தல் ரத்து செய்யப்படவேண்டிய தேர்தல் என்று உறுதியுடன் தெரிவித்த கட்சி தேமுதிக. தொகுதிக்குள் கண்கூடாக பணப்பட்டுவாடா நடைபெற்றதை அனைவரும் பார்த்தனர். மிகவும் மோசமான தேர்தலாகவே இந்த தேர்தல் நடைபெற இருந்தது. அதுமட்டுமல்லாமல் தேர்தலை ரத்து செய்வதால் மட்டுமே இங்கு எந்தவித மாற்றமும் வரப்போவதில்லை.

ஏற்கனவே இதேபோல்தான், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டன. மீண்டும் தேர்தல் நடத்தும்போது அதே வேட்பாளர்கள்தான் போட்டியிட்டனர். அதே பண விநியோகம்தான் அப்போதும் நடைபெற்றது. அதே ஆளும் கட்சிதான் தேர்தலில் வெற்றி பெற்றது.

இந்த முறை தேர்தல் நிறுத்தப்பட்ட ஆர்.கே.நகர் தொகுதியில் அதே பாணியில் இல்லாமல் இரும்புக் கரம் கொண்டு ஊழல் செய்த, பணப்பட்டுவாடா செய்த இரு கட்சிகளையும், அதாவது திமுக மற்றும் அதிமுகவில் உள்ள இரு அணிகளின் வேட்பாளர்களையும் இந்த தேர்தலில் இருந்து நீக்கி தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவிட வேண்டும். அப்போதுதான் வரும் காலங்களில் நேர்மையான தேர்தல் நடைபெறும். ஜனநாயக ரீதியாக மக்களால் தேர்வு செய்யக்கூடிய உண்மையான ஒரு உறுப்பினராக இருக்க முடியும்.

பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருக்கக்கூடிய காஷ்மீரில் இடைத்தேர்தல் நடைபெறும்பொழுது தமிழ்நாட்டிற்கு மட்டும் இந்த நிலை என்பது தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் தலைக்குனிவை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு காரணம் திமுகவும், அதிமுகவும்தான். ஓட்டுக்கு காசு கொடுக்கும் கலாச்சாரத்தை வளர்த்தது அந்த இரண்டு கட்சிகள்தான். ஊழலைப்பெருக்கி, தமிழகத்தை ஊழல் நாடாக மாற்றியது இதே அதிமுக, திமுகதான்.

இந்த தேர்தல் ரத்து என்பது நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தல் களத்தில் போட்டியிட விரும்பிய வேட்பாளர்களுக்கு, நேர விரயத்தையும், பண விரயத்தையும் தந்ததோடு மட்டுமல்லாமல் ஒரு தண்டனையாகவே தேமுதிக கருதுகிறது.

யார் தவறு செய்தார்களோ, ஓட்டுக்கு பணம் கொடுத்தார்களோ, அந்த கட்சிகளின் வேட்பாளர்களை இடைநீக்கம் செய்திருக்க வேண்டும். அதன்மூலம் இனிவரும் காலங்களில் ஓட்டுக்கு காசு கொடுக்கும் கலாச்சாரத்தை முற்றிலும் தடுக்க முடியும்.

அப்படி செய்வதை விட்டுவிட்டுத் துணை ராணுவத்தைக் கொண்டு வருவதாலோ, இங்குள்ள அதிகாரிகளை மாற்றுவதாலேயோ, தேர்தல் ஆணைய அலுவலர்களை மாற்றுவதாலேயோ ஒன்றும் நடந்துவிடப்போவதில்லை. பணம் கொடுத்த வேட்பாளர்களைத் தகுதி நீக்கம் செய்வது என்ற அறிவிப்புதான் உண்மையான நேர்மையான கட்சிகளின் வேட்பாளர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் பணியாற்றிய தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன். ஆட்சி பலம், அதிகார பலம், பண பலம் படைத்த மற்ற கட்சிகள் தேர்தல் களத்தில் இருந்தாலும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை சேர்ந்த அனைத்து கழக நிர்வாகிகளும், தொண்டர்களும், உற்சாகத்துடனும், நம்பிக்கையுடனும் அயராது பணியாற்றி, எந்த எதிர்பார்ப்பும் இன்றி கழகத்திற்காக சிறந்த முறையில் பணியாற்றி வெற்றி ஒன்றே இலக்கு என்பதை, மக்களுக்காக உழைக்கவேண்டும், தொகுதி முன்னேற்றத்திற்காக பாடுபட வேண்டும் என்ற ஒரே நோக்கோடு, பணத்திற்கு மதிப்பளிக்காமல் உழைப்புக்கு மதிப்பளித்த எனது கழகத்தை சேர்ந்த அனைவருக்கும் மீண்டும் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT