காலதாமதமில்லா காப்பீடு வசதிக்காக, விபத்து வழக்கு ஆவணங்களை இணையதளம் மூலம் வழங்கும் திட்டத்தை தமிழக காவல்துறை தொடங்கியுள்ளது. கோவையில் அத்திட்டம் நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
தமிழக காவல்துறையில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் பல கால கட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், குற்றம் மற்றும் குற்ற வாளிகளை இணைக்கும் வலைத் தளம் (சிசிடிஎன்எஸ்) தொழில்நுட்ப வசதி 2013-ம் ஆண்டு மார்ச் 13-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.
காணாமல் போனவர்களையும், அடையாளம் தெரியாத சடலங்களை யும் கண்டுபிடிக்கவும், பாஸ்போர்ட், பணி நியமன விசாரணையில் குறிப்பிட்ட நபர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று அறிந்துகொள்ளவும் இந்த தொழில்நுட்ப சேவை உதவிகரமாக இருந்து வருகிறது. வலைத்தளம் மூலமாகவே பொது மக்கள் புகார் அளிக்கவும், முதல் தகவல் அறிக்கை பதிவிறக்கம் செய்யவும் இதில் வசதிகள் உள்ளன.
இந்நிலையில், விபத்து வழக்கு களில் விரைந்து நிவாரணம் பெற்றுத் தர காப்பீட்டு நிறுவனங்களுக்கான வழக்கு ஆவணங்களையும் இந்த வலைத்தளம் மூலம் வழங்கும் சேவையை காவல்துறை தொடங்கி யுள்ளது. கோவையில் வெரைட்டி ஹால் சாலையில் உள்ள மாநகரப் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு (மேற்கு) காவல்நிலையத்தில் இந்த சேவையை காவல் ஆணையர் அ.அமல்ராஜ் நேற்று தொடங்கி வைத்தார்.
இத்திட்டம் குறித்து போலீஸார் கூறியதாவது: சாலை விபத்து வழக்கு களின் ஆவணங்களை காவல்நிலை யம், நீதிமன்றம் மூலமாக மட்டுமே பெற முடியும் என்பதால், விபத்துக் காப்பீடு போன்ற நிவாரணங்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகின்றன. இது தொடர்பாக சமீபத்தில் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், சாலை விபத்து வழக்குகள் குறித்த முதல் தகவல் அறிக்கை, இறுதி அறிக்கை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனங்களுக்கு, அவர்கள் கேட்கும்போது கொடுக்க வேண்டுமென டெல்லி மாநகர போலீஸாருக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்த அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்கள் உத்தரவிட்டன.
அதன் தொடர்ச்சியாக, தமிழகத் தில் இந்த உத்தரவை செயல்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஜன.5-ம் தேதி உத்தரவிட்டது. அதன் பேரில் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள வலைத்தளத்திலேயே இந்த வசதியை தமிழக காவல்துறை இணைத்துள்ளது. விபத்து வழக்கு தொடர்பான ஆவணங்களை காப்பீட்டு நிறுவனங்கள் நேரடியாக இந்த வலைத்தளத்தில் இருந்து பதி விறக்கம் செய்து கொள்ள முடியும். இதற்காக தேசிய தகவல் மைய உதவியுடன் புதிய மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
காப்பீட்டு நிறுவனங்கள் மாநில குற்ற ஆவண காப்பகத்துக்கு குறிப் பிட்ட தொகையை செலுத்தி, அந்த தொகைக்கு உண்டான காலம் வரை தங்களிடம் காப்பீடு செய்யப்பட் டுள்ள வாகனங்கள் விபத்துக்குள்ளா னால், அதற்கான வழக்கு நகல்களை வேண்டிய நேரத்தில் பெற்றுக் கொள்ள முடியும். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான், மாநிலம் முழுவதும் நேற்று இந்த வசதி ஒரே நேரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.