தமிழகம்

சென்னை மெரினா கலங்கரை விளக்க ரேடார் கருவியில் கதிர்வீச்சு அபாயம்

சி.கண்ணன்

சென்னை மெரினா கலங்கரை விளக்கத்தில் பொருத்தப்பட்டுள்ள ரேடார் கருவியால் கதிர்வீச்சு தாக்கும் அபாயம் உள்ளது.

தீவிரவாதிகள் தாக்குதல் உள்ளிட்டு கடல் வழியாக வருகிற ஆபத்துகளைக் சென்னையின் மெரினா கடற்கரையில் இருந்தபடியே கண்காணிக்க, மெரினா கலங்கரை விளக்கத்தின் மேலே சக்திவாய்ந்த ரேடார் கருவி மற்றும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் சென்னைக் கடல் வழியாகச் செல்லும் கப்பல்கள், மீன்பிடி படகுகள் உள்ளிட்ட பலவகை படகுகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. ரேடார் கருவி ஸ்கேன் செய்யும் பணிகளையும், கேமரா புகைப்படங்களையும் எடுக்கிறது.

இந்த ஸ்கேன் விவரங்கள் மற்றும் புகைப்படங்களைக் கலங்கரை விளக்கத்தின் அதிகாரிகள் உடனுக்குடன் கடலோரக் காவல்படைக்கு அனுப்பி வைக்கின்றனர். இவை தவிர கடலோரக் காவல் படையினரும் அதிவிரைவுப்படகுகள் மூலம் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கலங்கரை விளக்கத்தில் 11வது மாடியில் ரேடார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதால், 10வது மாடி வரை சென்று இயற்கை அழகை ரசிக்கப் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 11வது மாடியில் பொருத்தப்பட்டுள்ள சக்திவாய்ந்த ரேடார் கருவியில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு, 10வது மாடியில் உள்ள பொதுமக்களை எளிதாகத் தாக்கும் அபாயம் உள்ளது. கதிர்வீச்சு பாதிப்பு குறித்து அரசு மருத்துவமனை டாக்டர் சந்திரமோகன் கூறியதாவது:-

மருத்துவமனைகளில் உள்ள எக்ஸ்ரே அறையில் கதிர்வீச்சு அபாயம் இருப்பதால், அந்த அறையின் உள்ளே மற்றும் அறையின் அருகில் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் வரக்கூடாது என்று அறிவுறுத்துகிறோம்.

ரேடார் கருவியில் இருந்து அதிகமாகக் கதிர்வீச்சு வெளியேறும். கதிர்வீச்சு ஒரு முறை தாக்கினால் ஒன்றும் ஆகாது. ஆனால், கர்ப்பிணிகளைக் கதிர்வீச்சு தாக்கினால், கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படும். அதனால், கதிர்வீச்சு தாக்குதல் இருக்கும் இடங்களுக்குக் கர்ப்பிணிகள் செல்லக்கூடாது என்றார்.

கலங்கரை விளக்கம் அதிகாரி ஒருவர் கூறுகையில், கடல்வழியாக தீவிரவாதிகள் உள்ளே வருவதைக் கண்காணிக்க ரேடார் கருவி மற்றும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு என்று தனியாகக் கட்டுப்பாட்டு அறையும் உள்ளது என்றார்.

SCROLL FOR NEXT