தனி மனிதர்களின் மாற்றத்தால்தான் பெண்களுக்கான மாற்றத்தை கொண்டுவர முடியும் என்று ‘சல்மா’ ஆவணப்படம் திரையிடல் நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் சமுத்திரகனி கூறினார்.
கவிஞர், எழுத்தாளர் சல்மா கடந்துவந்த வாழ்க்கைப் பயணம் பற்றிய ஆவணப்படமான ‘சல்மா’ திரையிடல் நிகழ்ச்சி சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. பெர்லின் உள்ளிட்ட 120 நாடுகளில் திரையிடப்பட்டு 14 சர்வதேச விருதுகளை இந்த ஆவணப்படம் பெற்றுள்ளது. முதன்முறையாக சென்னையில் நேற்று முன்தினம் திரையிடப்பட்டது.
நிகழ்ச்சியில் எழுத்தாளர் சல்மா, திரைப்பட இயக்குநர் சமுத்திரகனி, முன்னாள் எம்.பி. வசந்தி ஸ்டான்லி, ‘தமிழ் ஸ்டுடியோ’ அருண் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவை ‘யுவர் ஹோப் ஈஸ் ரிமைனிங்’ மற்றும் ‘தமிழ் ஸ்டுடியோ’ ஆகியவை இணைந்து நடத்தின.
நிகழ்ச்சியில் சமுத்திரகனி பேசியதாவது:
சல்மா, இஸ்லாமிய சமூகத்தில் பிறந்ததால் மட்டுமே உருவானது அல்ல இந்த ஆவணப்படம். அவர் இந்து, கிறிஸ்துவ மதத்தில் பிறந்திருந்தாலும் இது உருவாகியிருக்கும். நிறைய ஆவணப்படங்கள் பார்த்து வருகிறேன். இந்தப் படத்தில் நிஜத்தை மட்டுமே பார்க்க முடிந்தது. உரையாடலுக்கு பிறகு ஓர் அமைதி வரும். அந்த அமைதியில் ஆயிரம் அர்த்தம் இருக்கும். அந்த அமைதியை வைத்து 100 பக்கங்கள் எழுதலாம். அதை இப்படத்தில் உணர்ந்தேன்.
‘பெண்கள் படிக்க வேண்டாம்; வீட்டுக்குள்தான் இருக்க வேண்டும்’ என்ற நிலையை மாற்றும் வேலையை ஒவ்வொரு தனி மனிதனும் கொண்டுவர வேண்டும். அதுவும், முடிவெடுக்கும் நிலையில் உள்ள தனி மனிதனால்தான் அதை கொண்டுவர முடியும். இந்த தனி மனித மாற்றத்தைதான் நாம் அடுத்த தலைமுறையினருக்கு கடத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
சல்மா பேசும்போது, ‘‘கண்டம் கடந்த ஒட்டுமொத்த சமூகத்துக்கான பிரச்சினையை பேசும் படமாகத்தான் இந்த ஆவணப்படத்தை பார்க்க வேண்டும். அந்த நோக்கத்தில்தான் இது எடுக்கப்பட்டுள்ளது. இதில் பொய் இல்லை, நடிப்பு இல்லை. இன்று இங்கு உள்ள பெரும்பாலான பெண்களின் நிலை, அவர்களுக்கான இருப்பிடம் ஆகியவற்றில் மாற்றம் வேண்டும் என்பதைத்தான் இது பிரதிபலிக்கிறது’’ என்றார்.