சைதாப்பேட்டையில் மெட்ரோ ரயில் பணியின்போது ராட்சத கிரேன் முறிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட மற்றொரு தொழிலாளிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னையின் பல்வேறு இடங்களில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன.
சைதாப்பேட்டை பஸ் நிலையம் அருகே வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்டுள்ளனர். இங்கு கான்கிரீட் ஸ்லாப், இரும்பு கம்பிகள் உள்ளிட்ட கனமான பொருட்களைத் தூக்க ராட்சத கிரேன் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சனிக்கிழமை காலை 7 மணி அளவில் தொழிலாளர்கள் வேலையில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது, திடீரென்று ராட்சத கிரேன் முறிந்து விழுந்தது. கிரேனுக்கு அடியில் சிக்கிய தொழிலாளர்கள் அலறினர். சக தொழிலாளர்கள் ஓடி வந்து,
கிரேனுக்கு அடியில் சிக்கியிருந்தவர்களை மீட்க போராடினர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீஸார் வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சித் பாஸ்வான் (20) என்ற தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டார். இரண்டு கால்களிலும் எலும்பு முறிந்த நிலையில் பலத்த காயங்களுடன் இருந்த தீரா நாயக் (19) என்ற தொழிலாளியை மீட்டு, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவரது இடது கால் முட்டிக்கு கீழே முழுவதும் சேதமடைந்துவிட்டது. எலும்புகள் நொறுங்கிவிட்டன. அதனால், இடது காலை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என டாக்டர்கள் தெரிவித்தனர்.
விபத்து நடந்த இடத்தில் மெட்ரோ ரயில் பணிகள் நிறுத்தப்பட்டு, மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. கிரேன் ஆபரேட்டர் கதிரவனிடம் சைதாப்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மீண்டும் ஜனவரி 11
மெட்ரோ ரயில் பணியில் கடந்த 2 ஆண்டுகளில் 5 முறை விபத்து நடந்துள்ளது. கிரேன் முறிந்து விழுவது 2 முறையாக நடந்துள்ளது. 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி பச்சையப்பன் கல்லூரி அருகே ராட்சத கிரேன் முறிந்து விழுந்ததில் வடமாநிலத்தைச் சேர்ந்த சிந்து (20) என்ற தொழிலாளி உயிரிழந்தார்.
6 பேர் பலத்த காயம் அடைந்தனர். கடந்த ஆண்டு ஜனவரி 11-ம் தேதி ஆலந்தூரில் மெட்ரோ ரயில் பணியின்போது ராட்சத இரும்பு பாலம் விழுந்ததில் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த டிம்பால் (24) என்ற தொழிலாளி உயிரிழந்தார். 2 பேர் காயமடைந்தனர்.