தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் கிராமப்புறங்களில் 24 லட்சம் வீட்டு கழிவறைகள் கட்டப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் 2017- 2018 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மீன்வளம், நிதி, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
பட்ஜெட் உரையை வாசித்த அமைச்சர் ஜெயக்குமார், ''மக்களிடம் கழிவறைகள் கட்டி பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும், திடக்கழிவு மேலாண்மையை செம்மைப்படுத்தவும், இந்திய அரசு தூய்மை இந்தியா இயக்கத்தை தொடங்கி, அதன் மூலம் 100 சதவீத சுகாதார இலக்கை அடைய உறுதி பூண்டுள்ளது.
2016-2017 நிதியாண்டில் 15 லட்சம் வீட்டு கழிவறைகளும், 50 சமூக சுகாதார வளாகங்களும் ரூ.1821 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டது. 2017-18 நிதியாண்டில் தூய்மை இந்தியா இயக்கத்தின் (ஊரகம்) கீழ், 24 லட்சம் வீட்டு கழிவறைகளும், 50 சமூக சுகாதார வளாகங்களும் கட்டப்படும்.
ஊரகப் பகுதியில் திடக்கழிவுகளை சேகரித்தல், பிரித்தல் மற்றும் அகற்றுதல் போன்ற பணிகளுக்காக ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் உள்ள 65 ஆயிரம் பணியாளர்களை தூய்மை காவலர்களாக இந்த அரசு பயன்படுத்தும்'' என்று தெரிவித்துள்ளார்.