பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை கடந்த ஜூலை 2016-ல் 106 டாலராக இருந்தது. தற்போது 58 டாலராக குறைந்துள்ளது. இந்த விலை சரிவை மக்களுக்கு பயன்படுகிற வகையில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் தொடர்ந்து கலால் வரியை உயர்த்தி அரசு கஜானாவை நிரப்பி நிதிநிலை அறிக்கையில் ஏற்பட்ட பற்றாக்குறையை சமாளிக்க நரேந்திர மோடி அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதைத் தொடர்ந்து நேற்று பெட்ரோல் லிட்டர் ரூ.1.29, டீசல் விலை 97 காசுகள் விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளன. இத்தகைய அறிவிப்புகளினால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு ஏற்பட்டு, பணவீக்கத்தை அதிகரித்து சாதாரண மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்க விலையான ரூ.25யை விட மத்திய - மாநில அரசுகளின் மொத்த வரியாக ரூ.36.49 விதிக்கப்பட்டு வருகிறது. இதன்படி நவம்பர் 2014-ல் ஒரு லிட்டர் பெட்ரோலில் கலால் வரி ரூ.9.20 ஆக இருந்தது, ஜனவரி 2017-ல் ரூ.21.48 ஆகவும் உயர்ந்துள்ளது.
அதேபோல ஒரு லிட்டர் டீசலில் ரூ.3.46 ஆக இருந்த கலால் வரி தற்போது ரூ.17.33 ஆக உயர்ந்திருக்கிறது. இத்தகைய கலால் வரி உயர்வினால் தான் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது.
இத்தகைய நடவடிக்கைகள் காரணமாக கடந்த ஆண்டில் கலால் வரி மூலம் ரூ.99 ஆயிரத்து 184 கோடி மத்திய அரசுக்கு வருவாய் கிடைத்திருக்கிறது. மக்கள் நலனைவிட அரசு கஜானாவை நிரப்புவதை நோக்கமாகக் கொண்ட மத்திய பாஜக அரசு இத்தகைய மக்கள் விரோத நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.
ஏற்கெனவே பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் போது பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியிருப்பதை நரேந்திர மோடியின் துல்லியத் தாக்குதலாகவே கருத வேண்டியிருக்கிறது. இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்'' என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.