ஆற்று மணல் விற்பனையை அரசுடைமை ஆக்கினால் ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி முதல் ரூ.25 ஆயிரம் கோடி வரை கூடுதல் வருமானம் கிடைக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''2003 -04-ம் ஆண்டில் ரூ.150 கோடியாக இருந்த மணல் வருமானம் 10 ஆண்டுகள் கழித்து 2013-14 ஆம் ஆண்டில் ரூ.133.37 கோடியாக குறைந்து விட்டது. இடையில் சில ஆண்டுகள் மணல் விற்பனை மூலமான வருவாய் ரூ.200 கோடியை நெருங்கிய போதிலும், அரசுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய வருவாயில் நூற்றில் ஒரு பங்கு கூட அரசுக்கு கிடைக்கவில்லை.
மணல் விற்பனையில் அரசுக்கு கிடைப்பதை விட மணல் கொள்ளையருக்கு அதிக வருவாய் கிடைப்பதை கறுப்புப் பண வழக்கில் கைதாகியுள்ள சேகர் ரெட்டியே ஒப்புக் கொண்டிருக்கிறார்.
2003-ம் ஆண்டில் மணல் குவாரிகள் அரசுடைமையாக்கப்பட்ட போது இருந்ததை விட இப்போது மணல் வணிகம் பல மடங்கு அதிகரித்திருப்பது தமிழக அரசுக்கே தெரியும். அவ்வாறு இருக்கும் போது மணல் விற்பனை மூலமான வருவாய் அதிகரிக்காதது ஏன்? என்பது குறித்து ஆட்சியாளர்கள் ஆய்வு நடத்தியிருக்க வேண்டாமா?.
மணல் விற்பனை மூலம் அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாயை மணல் கொள்ளையர்களுடன் சேர்ந்து ஆட்சியாளர்களே சுரண்டுவது தான். ஆற்று மணல் விற்பனையை இன்றுமுதல் அரசுடைமை ஆக்கினால் கூட ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி முதல் ரூ.25 ஆயிரம் கோடி வரை கூடுதல் வருமானம் கிடைக்கும். எனவே, மணல் வணிகத்தை உடனடியாக அரசுடமையாக்க வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.