தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பச்சிளம் குழந்தைகள் பிரிவில் தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநர் நேற்று ஆய்வு செய்தார்.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவில் 11 குழந்தைகள் இறந்தது தொடர்பாக தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநர் கீதாலட்சுமி நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
ஆய்வுக்கு பிறகு அவர் கூறும்போது, ‘தருமபுரி அரசு மருத்துவமனை பச்சிளங் குழந்தைகள் பிரிவில் கருவி மற்றும் அடிப்படை வசதிகள் அனைத்தும் போதிய அளவில் உள்ளது. ஆய்வறிக்கையை நவம்பர் 20-ம் தேதி அரசுக்கு அளிக்க உள்ளோம். ஆண்டுக்கு ஆண்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2014-ம் ஆண்டில் இதுவரை 4,143 குழந்தைகள் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டன. அதில் 445 குழந்தைகள் மட்டுமே இறந்துள்ளன. அதாவது 10.7 சதவீதம்தான் இறப்பு நிகழ்ந்துள்ளது. மற்ற மருத்துவமனைகளில் கைவிடப்பட்ட குழந்தைகள்தான் இங்கே சிகிச்சைக்கு வருகின்றன. அதில் ஒருசில குழந்தைகள் இறந்து விடுகின்றன. இனி இறப்பு இருக்காது. தற்போது 73 குழந்தைகள் உள்ளன. அதில் 54 குழந்தைகள் உடல்நலம் தேறி தாயிடம் சேர்க்கப்பட்டுள்ளன. மீதமுள்ள குழந்தைகளில் 16 நிலை இரண்டிலும், 3 குழந்தைகள் நிலை மூன்றிலும் உள்ளன. இந்த குழந்தைகளும் விரைவில் நலம்பெற்று விடும்’ என்றார்.