2015-16-ம் ஆண்டில், அபரிமிதமான உணவு உற்பத்திக்கான மத்திய அரசின் ‘கிரிஷி கர்மான்’ விருதை தமிழகம் பெற்றுள்ளது. மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து இந்த விருதை தமிழகம் பெறுகிறது.
நெல் உள்ளிட்ட உணவு தானியங்கள், பருப்பு வகைகள், சிறு தானியங்கள், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் சிறப்பாக செயல்படும் மாநிலங் களுக்கு மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் கிரிஷி கர்மான் விருது வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 2013-14-ம் ஆண்டில் பருப்பு வகைகள் உற்பத்தியை அதிகரித் ததற்காக கிரிஷி கர்மான் விருதை பெற்றது. தொடர்ந்து 2014-15ல் சிறுதானிய உற்பத்திக்காக கிரிஷி கர்மான் விருது தமிழகத்துக்கு கிடைத்தது. இந்நிலையில், 3 வது ஆண்டாக தமிழகத்துக்கு கிரிஷி கர்மான் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015-16-ம் ஆண்டில் ஒரு கோடியே 13 லட்சம் டன்னுக்கும் அதிகமான உணவு தானிய உற்பத்தியை அடைந்ததற்காக தமிழகத்துக்கு இந்த விருது கிடைத்துள்ளது.
தமிழகத்துக்கு அடுத்ததாக இமாச்சல பிரதேசம், திரிபுரா மாநிலங்களும் இந்த விருதை பெற்றுள்ளன. இந்த விருதை பெறும் மாநிலங்களுக்கு தலா ரூ.5 கோடி ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்படுகிறது. இது தவிர அரிசி உற்பத்திக்காக பஞ்சாப், கோதுமை உற்பத்திக்காக மத்திய பிரதேசம், பருப்பு வகைகள் உற்பத்திக்காக மேற்கு வங்கம், சிறுதானியங்கள் உற்பத்திக்காக பிஹார் மாநிலங்களுக்கும் விருது வழங்கப்படுகிறது. இதற்கான பரிசுத்தொகை ரூ.2 கோடியாகும். இதுதவிர, உணவு தானிய உற்பத்தியில் சிறப்பாக செயல்பட்டதற்கான 3-ம் கட்ட நினைவு விருது மேகாலயா மாநிலத்துக்கு வழங்கப்படுகிறது. இதற்காக ரூ.1 கோடி ரூபாய் பரிசுத் தொகையை அம்மாநிலம் பெறுகிறது.
இது தொடர்பாக தமிழக வேளாண்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “ கடந்த 2015-16-ம் ஆண்டில் பருவமழை பொழிவு அதிகமாக இருந்ததால், உணவு தானியங்கள் உற்பத்தியும் அதிகமாக இருந்தது. இதனால்தான் இந்த விருதை பெற முடிந்தது’’ என்றார்.