தமிழகம்

டிராபிக் ராமசாமி மீது பெண் பக்தர்கள் புகார்

செய்திப்பிரிவு

சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமிக்கு எதிராக மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேல்மருவத்தூர் செவ்வாடை பெண் பக்தர்கள் புகார் அளித்தனர்.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பெண் பக்தர்கள் சார்பில், மதுரை கூடல் நகர் திருவிக. நகரைச் சேர்ந்த கண்ணகி தலைமையில் சிலர் மதுரை நகர் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். அவர்கள் துணை காவல் ஆணையர் அருண் சக்திகுமாரிடம் புகார் மனு அளித்தனர்.

அதில் கூறியிருப்பதாவது:

மதுரையில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி, பங்காரு அடிகளாரை வழிபடுகிறோம். ஜாதி, மதம் பார்க்காமல் கருவறைக்குள் சென்று சிறப்பு அபிஷேகம், கலச விளக்குப் பூஜைகளில் பங்கேற்கிறோம். எங்களை டிராபிக் ராமசாமி தனது ‘யூடியூப்’ இணைய தளத்தில் பிப்.28-ல் அவதூறாகப் பேசியிருக்கிறார். மேலும் கோயில் மற்றும் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தை மூடிவிடுவதாகவும் எச்சரித்துள்ளார்.

வாங்கும் சம்பளத்துக்கு ஒழுங்காக வேலை பார்க்குமாறு அரசு அதிகாரிகளை அவர் ஏளனமாகப் பேசி உள்ளார். அவரது செயல் எங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளது. எங்களையும், பங்காரு அடிகளாரையும் இழிவாகப் பேசிய டிராபிக் ராமசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் யூடியூப்பில் பேசிய அவதூறு பேச்சை உடனே நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT