மைல் கற்களில் இந்தியை அழிப்பதற்கு பதில் தமிழிலும் எழுதினாலும் அதே அளவு தார்தான் தேவைப்படும் என்று எஸ்.வி.சேகர் ட்விட்டரில் கூறியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள நெடுஞ்சாலைகளின் மைல் கற்களில் ஆங்கிலம் அழிக்கப்பட்டு இந்தியில் எழுதப்பட்டு வருவதாக திமுக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்திருந்தன. இந்த விவகாரத்தில் திமுக பாஜக இடையே காரசாரமான கருத்து மோதல் நடந்தது.
தமிழ் மொழியை மட்டம் தட்டும் நோக்கத்துடன் பாஜக அரசு செயல்படுவதாக கண்டனக் குரல்கள் எழுந்தன.
இந்நிலையில் இது குறித்து நடிகரும், இயக்குநருமான எஸ்.வி.சேகர் தன் ட்விட்டர் பதிவில், ''மைல்கற்களில் இந்தியை அழிப்பதற்கு பதில் தமிழிலும் எழுதினாலும் அதே அளவு தார்தான் தேவைப்படும். ஆக்கபூர்வமாக பயன்படுத்துங்கள்'' என்று கூறியுள்ளார்.
முன்னதாக, தமிழக மாணவர்கள் இந்தி கற்பதால் என்ன பிரச்சினை வந்து விடப்போகிறது என்று எஸ்.வி.சேகர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.