ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், ஆர்டிஐ மனு ஒன்றில் நடிகர் சஞ்சய் தத் தண்டனைக் காலம் முடியும் முன்பாகவே விடுதலை செய்யப்பட்டதன் காரணம் குறித்து கேட்டிருந்தார். ஆனால் அவரது மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
அதாவது 3-வது நபர் ஒருவரின் விடுதலை விவரங்களை கோர முடியாது என்ற அடிப்படையில் மனுவை தகவல் அலுவலர் / சிறை அதிகாரி நிராகரித்தார்.
ஏற்கெனவே இதே தகவலைக் கோரியிருந்த போது, எரவாடா சிறை அதிகாரிகள், மனுவுடன் அனுப்பப்பட்டிருந்த ரூ.10-ற்கான போஸ்டல் ஆர்டரில் 2011-ம் ஆண்டு என்று குறிப்பிடப்பட்டிருந்ததால் அது செல்லாது என்று கூறி மனுவை நிராகரித்தனர்.
இந்த முறை 3-ம் நபர் விவகாரம் குறித்து கேட்க அனுமதியில்லை என்ற அடிப்படையில் பேரறிவாளன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 11, 2016-உடன் 25 ஆண்டுகால சிறைத் தண்டனைக் காலத்தை வந்தடையும் பேரறிவாளன், தகவல் அலுவலரின் இந்தப் பதிலால் அதிருப்தியுற்று மேல்முறையீடு செய்துள்ளார். அரசு அதிகாரி ஒருவர் தன் விருப்பத்தின் கீழ் எடுத்த முடிவை மூன்றாம் நபர் உரிமை என்றெல்லாம் கூறி பொதுமக்களுக்கு தெரியாமல் மறைக்க முடியாது என்பது பேரறிவாளன் தரப்பு வாதம்.
இது குறித்து காமன்வெல்த் மனித உரிமைகளின் தகவலுரினை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஷ் நாயக்கிடம் கேட்ட போது, “3-ம் நபர் உரிமை என்பதைக் காரணம் காட்டி தகலுரிமை மனுவை நிராகரிக்க அந்த சட்டத்தில் ஏதுமில்லை. இந்த விவகாரத்தில் அரசு அதிகாரி எடுத்த ஒரு முடிவின் மீது தகவலுரிமை சட்டத்தின் கீழ் தகவல் கோரப்பட்டுள்ளது. தண்டனைக் காலம் முடியும் முன்பே விடுவித்த விவகாரத்தில் ரகசியத்தைக் காக்க வேண்டியதில்லை. பொதுமக்களுக்குத் தெரிவிக்கலாம்” என்றார்.
குடிமை உரிமைகளுக்கான மக்கள் இயக்கப் பொதுச்செயலர் வி.சுரேஷ் கூறும்போது, தண்டனைக் காலம் முன்பே கைதியை விடுவிப்பது என்பதை வெளிப்படையாகத் தெரிவிப்பதில் சிக்கல் ஒன்றுமில்லை. ஆர்டிஐ சட்டத்தின் அடிப்படைக் கொள்கை என்னவெனில் தகவலுரிமை சட்டத்தின் கீழ் ஒரு தகவலைக் கோருவோர் அந்தத் தகவலைக் கொண்டு அவர் என்னச் செய்யப்போகிறார் என்பதை வெளியிட வேண்டிய தேவையில்லை” என்றார்.