தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி மர்மமான முறையில் இறந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பேராவூரணி அருகே உள்ள ஏனாதிகரம்பை கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிகாந்த்(36). இவர், கடந்த 26-ம் தேதி பேராவூரணியில் ஒரு வீட்டில் திருட முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்பகுதி மக்கள் அவரைப் பிடித்து, பேராவூரணி போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
அவரிடம் விசாரணை நடத்திய பிறகு, நேற்று முன்தினம் மாலை, பேராவூரணி காவல் உதவி ஆய்வா ளர் தங்கவேல் மற்றும் போலீஸ் காரர் வீரமணி ஆகியோர் ரவி காந்தை பட்டுக்கோட்டை நீதிமன் றத்துக்கு அழைத்துச் சென்றுள்ள னர். இரவு நேரமானதால் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல், பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்தில், தங்க வைத்துள்ள னர். இந்நிலையில், அந்த அறை யில் தூக்கிட்ட நிலையில் ரவிகாந்த் இறந்து கிடந்தது நேற்று காலை தெரியவந்தது. அவரது சடலம் பிரேதப் பரிசோதனைக்காக, பட்டுக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைக்கப் பட்டது.
இந்நிலையில், “ரவிகாந்த் மரணத்தில் மர்மம் உள்ளது. கடந்த 26-ம் தேதி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவரை, 2 நாட்களாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தமால் வைத்திருந்தது ஏன்? இது தொடர்பாக விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவரது உற வினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.