தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியைச் சேர்ந்த ஆசிரியத் தம்பதி வெற்றிவேல்-கிருஷ்ணவேணி (32). இவர்களுக்கு 5 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்து கடந்த 18-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை ஆரோக்கிய குறைவுடன் காணப்பட்டதால் 23-ம் தேதி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பச்சிளங் குழந்தைகள் பிரிவில் சேர்த்தனர்.
அங்கு நடத்திய பரிசோதனை யில் அந்த இளம் சிசுவின் சிறு குடலில் 5 இடங்களில் ஓட்டைகள் இருப்பது தெரியவந்தது. இது போன்ற பிரச்சினைகளுக்கு சென்னை போன்ற பெருநகரங்களில் தான் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. எனவே இந்தக் குழந்தையையும் சென்னைக்கு அழைத்துச் செல்லும் சூழல் உருவானது.
ஆனால், இதுபற்றி அறிந்த தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் மற்றும் சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் அந்த குழந்தையை காப்பாற்ற சிறப்பு ஏற்பாடுகளுக்கு அனுமதித்தனர்.
இளம் குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர் களான சேலம் அரசு மருத்துவ மனையில் பணியாற்றும் சங்கர், சரவணன், சென்னை எழும்பூரில் பணியாற்றும் ஹரிஹரன் மற்றும் மோகனஹரிஹரன், பாலசுப்பிர மணியம் ஆகிய மருத்துவர்கள் அடங்கிய குழு இதற்கென அமைக்கப்பட்டது. குழந்தையின் சிகிச்சைக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் கேட்டு பெற்றுக் கொள்ளும்படி தமிழக சுகாதாரத் துறை இந்த மருத்துவக் குழுவுக்கு அனுமதி அளித்தது.
உடனே தயாரான மருத்துவக் குழுவினர் 23-ம் தேதி மாலை 6 மணிக்கு அந்த குழந்தையின் சிறுகுடலில் உள்ள ஓட்டைகளை அடைக்கும் முயற்சியை தொடங்கினர். இரவு 8 மணிக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு இந்த குழந்தை, தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த மருத்துவக் குழுவினருக்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் (பொ) நாராயண பாபு, சக மருத்துவர்கள், குழந்தையின் குடும்பத்தார் சார்பில் வாழ்த்தும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.
தருமபுரி அரசு மருத்துவமனை யில் பச்சிளங் குழந்தைகள் அடுத் தடுத்து இறந்து வந்த நிலையில் பிறந்து 6 நாளான குழந்தைக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.