புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட 17 வயது சிறுவன், தன்னை கருணைக் கொலை செய்ய உத்தரவிடக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி தாராபடவேடு பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். மூட்டை தூக்கும் கூலித் தொழிலாளியான இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி யும் மணிகண்டன், குமார், முத்து, சக்திவேல் என்ற மகன்களும் பூங்கொடி என்ற மகளும் உள்ளனர். இதில், 17 வயதான சக்திவேலுக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு தொண்டையில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. இதற்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
அப்போது நடத்திய மருத்துவ பரிசோதனையில், சக்திவேலுக்கு தொண்டையில் புற்றுநோய் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அறிஞர் அண்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனையில் சக்திவேல் சிகிச்சை பெற்றுவந்தார். கழுத்தில் துளையிடப்பட்டு சுவாசிக்க ஏற்பாடு செய்துள்ளனர். ரேடியோகிராபி, கீமோ தெரபி சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சக்திவேலுக்கு புற்றுநோய் முற்றிவிட்டதால் இனி அவரைக் காப்பாற்ற முடியாது என மருத்துவர்கள் கூறியுள்ளனர். வேறு வழியில்லாமல் சென்னை, வேலூரில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக் காக சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை அளிக்க முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சக்திவேல் தனது குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னுவை புதன்கிழமை காலை சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அதில், “எனக்கு அரிய வகை புற்றுநோய் தாக்கியுள்ளது. இந்தியாவில் 17 வயதில் என்னைத்தவிர யாரும் இந்த நோயால் பாதிக்கவில்லை. மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க முடியாது என கூறிவிட்ட னர். எனக்கு வாழப் பிடிக்கவில்லை. ஒவ்வொரு நொடியும் மரணத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறேன். மரணம் நெருங்கிவிட்டதால் என்னை கருணைக் கொலை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
சக்திவேலுவின் தாய் சரஸ்வதி கண்ணீர் மல்க கூறுகையில், “கூலி வேலை செய்து பிழைப்பு நடத்திவருகிறோம். என் மகனுக்கு வந்த நோயை குணப்படுத்த முடியாது என்கிறார்கள். அவன் வீட்டில் கஷ்டப்படுவதை எங்களால் பார்க்க முடியவில்லை. சாப்பிட்டு இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. போகிற இடத்தில் எல்லாம் சிகிச்சை அளிக்க முடியாது என்கிறார்கள். அவன் சாகும்வரை மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும். எங்களிடம் வசதி இல்லை. அரசாங்கத்திடம் உதவி கேட்டு வந்திருக்கிறோம்.
என் மகனுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லையென்றால் கருணைக் கொலை செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிடவேண்டும்” என்றார்.
மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னு, சென்னை மல்டி சூப்பர் ஸ்பெஷா லிட்டி மருத்துவமனை யில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்திருப்பதாக கூறி, கடிதம் ஒன்றை சக்திவேல் குடும்பத்தினரிடம் அளித்தார்.