தமிழகம்

சுவாதி கொலை வழக்கு: சந்தேக நபரின் சற்றே தெளிவான புகைப்படத்தை வெளியிட்டது போலீஸ்

செய்திப்பிரிவு

சுவாதி கொலையாளி என கருதப்படும் சந்தேக நபரின் சற்றே தெளிவான சிசிடிவி புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

சம்பவத்தன்று நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து வெளியேறும் அந்த நபரின் உருவம் அருகிலிருந்த வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.

அந்த சிசிடிவி காட்சியே வழக்கின் முக்கிய ஆதாரமாக இருக்கிறது. இந்நிலையில், சிசிடிவியில் பதிவாகியிருந்த காட்சியிலிருந்து சந்தேக நபரின் சற்றே தெளிவான புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

'எதுவும் பேசாத கொலைகாரன்'

சம்பவத்தன்று ரயில் நிலையத்திலிருந்த நபர் ஒருவர் கூறிய சாட்சியின்படி சுவாதியின் அருகே வந்த நபர் அவரிடம் பேசவில்லை, வாக்குவாதம் செய்யவில்லை. வந்ததும் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு சென்றிருக்கிறார் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

சுவாதியிடம் அந்த நபர் எதுவும் பேசாததாலேயே அவர் சுவாதிக்கு அந்நியராக இருக்க வேண்டிய அவசியமில்லை. காலை 6.31 மணிக்கு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்குள் நுழைந்த அந்த நபர் 6.42 மணிக்கெல்லாம் வெளியேறிவிட்டார். வெறும் 11 நிமிடங்கள் மட்டுமே அவர் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நின்றிருக்கிறார். அந்த நபரின் ஒரே குறிக்கோள் சுவாதியை கொலை செய்வதாக மட்டுமே இருந்திருக்கிறது. அதனாலேயே அவர் எந்த பேச்சும் இல்லாமல் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார் என்றார்.

கொலைக்கு பயன்படுத்தப்பட்ட அரிவாளில் கைரேகை ஏதும் இருக்கிறதா என கேட்கப்பட்டபோது, "அந்த அரிவாளில் மரக்கட்டையால் ஆன கைப்பிடி இருக்கிறது. இருப்பினும் தடயவியல் துறைக்கு அனுப்பியிருக்கிறோம். சிசிடிவியில் பதிவாகியிருந்த நபர்தான் கொலையாளி என்பதை சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் உறுதிப்படுத்தியிருக்கிறார்" என்றார்.

போலீஸுக்கு தகவல்:

சுவாதி கொலை வழக்கு தொடர்பாக தொலைபேசி வாயிலாக ஒருவர் துப்பு கொடுத்திருக்கிறார். அவர் ஸ்வாதி பயணிக்கும் அதே ரயிலில் சிசிடிவியில் பதிவான நபர் பயணித்ததை இரண்டு முறை பார்த்திருப்பதாக கூறியிருக்கிறார். அதுதவிர புதிதாக கிடைத்துள்ள சிசிடிவி காட்சி ஒன்றில் கொலையாளியுடன் உருவ ஒற்றுமை கொண்ட நபர் ஒருவர் சுவாதியிடன் தகராறு செய்வது பதிவாகியிருக்கிறது. தாம்பரம் அல்லது மாம்பலம் ரயில் நிலையத்தில் அந்த காட்சி பதிவாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

செல்போன் சிக்னல்:

சுவாதியை கொலை செய்த கொலைகாரன் அவரது செல்போனை யும் எடுத்துச் சென்றுவிட்டார். காலை 6.40 மணிக்கு சுவாதி கொலை செய்யப்பட்டார். அவரது செல்போனை எடுத்துச் சென்ற கொலைகாரன் காலை 8.15 மணி வரை அதை ‘ஆன்' செய்தே வைத்திருந்திருக்கிறார். பின்னர் அதை ‘சுவிட்ச் ஆப்' செய்திருக்கிறார். சுவிட்ச் ஆப் செய்யப்பட்டபோது அவரது செல் போன் சிக்னல் சூளைமேடு பகுதியை காட்டியுள்ளது. கொலை செய்யப்பட்ட சுவாதியின் வீடும் சூளைமேட்டில்தான் உள்ளது. செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட இடமும் அவரது வீட்டு அருகில் உள்ள இடத்தையே காட்டுகிறது.

எனவே சுவாதியை கொலை செய்து விட்டு, அந்த நபர் சூளைமேட்டுக்கு சென்றிருப்பது உறுதி செய்யப்பட் டுள்ளது. எனவே சுவாதியை கொலை செய்தவர் சூளைமேட்டில் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் சூளை மேட்டில் உள்ள வீடுகள், தங்கும் விடுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் கடந்த 4 நாட்களாக போலீஸார் சோதனை செய்து வருகின்றனர். சூளைமேட்டில் வீடு வீடாக சோதனை நடத்தப்பட்டு வரு கிறது. கொலையாளி என்று சந்தேகப் படும் நபரின் புகைப்படத்தையும் பொதுமக்களிடம் காட்டி விசாரணை நடத்துகின்றனர்.

பெங்களூர், மைசூர்:

செங்கல்பட்டு அருகே பரனூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்த சுவாதி, முன்னதாக மைசூரில் உள்ள நிறுவனத்தில் பயிற்சியும், பின்னர் பெங்களூரிலும் பணிபுரிந்துள்ளார். அதன் பின்னரே பரனூர் நிறுவனத்துக்கு வந்துள்ளார். கொலையாளி குறித்த தகவல்களை சேகரிக்க மைசூர், பெங்க ளூருக்கும் தனிப்படை சென்றுள்ளது. அங்கு சுவாதியுடன் பணிபுரிந்த நண்பர் களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

சுவாதியை கொலை செய்த நபர் தப்பிச் செல்லும்போது கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அவரது படத்தை வரையும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ள னர். சுவாதியை கொலை செய்த நபர் தப்பிச் செல்லும்போது, அவரை ஓர் இளைஞர் நேருக்கு நேர் பார்த்திருக் கிறார். ஆனால் அந்த இளைஞர் யார் என்று தெரியவில்லை. கொலையாளி எப்படி இருப்பார் என்று அந்த இளைஞர் தகவல் தெரிவித்தால் படம் வரைய உதவியாக இருக்கும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT