சென்னையில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக பல்லாவரம் நகராட்சி குப்பை கிடங்கில் நேற்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
பல்லாவரம் நகராட்சிப் பகுதியில், 42 வார்டுகளில் நாள்தோறும் குப்பைகள் பொதுமக்களிடம் இருந்து சேகரிக்கப்படுகிறது. 110 மெட்ரிக் டன் அளவுக்கு சேகரிக்கப்படும் குப்பை, 20 ஆண்டுகளாக குரோம்பேட்டையில் உள்ள குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகிறது. தற்போது கடந்த ஆறு மாதங்களாக வேங்கடமங்கத்தில் திடக்கழிவு மேலாண்மை ஆலைக்கு செல்கிறது. டன் கணக்கில் உள்ள பழைய குப்பைகள் அனைத்தும் குரோம்பேட்டையில் உள்ள கிடங்கில் குப்பை மலைபோல் குவிந்து உள்ளது. தற்போது அங்கு பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று காலை, 8 மணி அளவில் திடீரென குப்பைக் கிடங்கில் தீப்பிடித்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால் அப்பகுதியில் குடியிருப்போர் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் கடும் அவதி அடைந்தனர். தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து சென்ற தாம்பரம் தீயணைப்புப் படையினர் எரிந்து கொண்டிருந்த குப்பைகளில் தண்ணீரை வேகமாகப் பீய்ச்சி அடித்து 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.