தமிழகம்

மனித - வன உயிரின மோதல் முரண்பாட்டுக்கு தீர்வுகாண குழு

கா.சு.வேலாயுதன்

மேற்குத்தொடர்ச்சி மலை கிராமப் பகுதிகளில் மனித-வன உயிரின மோதல் முரண்பாட்டுக்குத் தீர்வு காண குழு அமைக்க வனத்துறை திட்டமிட்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையோர கிராமங்களில் மனித-வனவிலங்குகள் மோதல் விவகாரம் ஆட்சியரின் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், 'யானைக்கு வேட்டி கட்டிய லோகோ’-வுடன் ஒரு திட்டத்தை வனத்துறை வகுத்துள்ளது.

மனிதர்களை மட்டுமல்லாது மிருகங்களையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்புணர்வு அனைவருக்கும் இருக்கிறது என்பதை வலியுறுத்தும் வகையில், வனத்தை ஒட்டி வசிக்கும் அனைத்து மக்களுக்கும் விழிப்புணர்வூட்டுவது, வன விலங்குகளை காப்பாற்ற முயற்சி மேற்கொள்வது, வனத்துறை மட்டுமல்லாது அனைத்துத் துறை அதிகாரிகளும் இணைந்து, தன்னார்வ அமைப்புகளை ஒருங்கிணைத்து செயலாற்றுவது என்பது 'களிறு’ என்ற இத் திட்டத்தின் நோக்கமாகும்.

இதற்காக கடந்த சில மாதங்களாக மாவட்ட அளவிலான விவசாயிகள், வனத் துறை, காவல்துறை, 52 பஞ்சாயத்துப் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்துரையாடல் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. துணை கண்காணிப்பாளர் நிலையில் உள்ள காவல் துறை அலுவலர்களுக்கு வன விலங்குகள் பாதுகாப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டங்களின் மூலம் வனமும், அதைச் சார்ந்துள்ள வன விலங்குகள் குறித்த புரிதலில் பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் பிற துறையினர் மத்தியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர் வனத்துறை அலுவலர்கள்.

இத் திட்டம் குறித்து கோவை மண்டல வனப் பாதுகாவலர் அன்வர்தீன் கூறியதாவது:

ஆரம்ப கூட்டங்களில் தங்களுக்கு பயத்தையும், சேதத்தையும் ஏற்படுத்தும் வனவிலங்குகள், குறிப்பாக யானைகள் மீது வெறுப்புணர்வு இருந்ததை பொதுமக்களிடம் காண முடிந்தது. கடந்த கால கூட்டங்களில் அதை அவர்கள் புரிந்திருப்பதை உணர முடிகிறது. மக்களது உணர்வுகளையும் புரிந்து கொள்ள முடிந்துள்ளது.

அடுத்த கட்டமாக, முக்கியமான பகுதிகளில் தடுப்பு வேலிகள் போட திட்டமிட்டுள்ளோம். யானைகள் நடமாட்டம் உள்ள பஞ்சாயத்துகளில் கள ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. அங்குள்ள மக்களைக் கொண்டே மனித- வன உயிரின மோதல் முரண்பாட்டைக் களையும் குழு அமைக்கவும் ஏற்பாடு உள்ளது. அங்குள்ள பள்ளி மாணவர்களுக்கு யானைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளோம். இதுவரை யானைகள் அடித்து மனித மரணம் பெரும்பாலும் 60 வயதானவர்கள், பார்வை குன்றியவர்கள், அதிகாலையில் பொதுவெளிக்கு 'கழிக்க’ செல்கிறவர்களுக்கே நிகழ்ந்திருக்கிறது. இதற்கேற்ப இப் பகுதி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மலையோர கிராமப் பஞ்சாயத்துகளில் இதுவரை சுமார் 200 கிமீ தொலைவுக்கு அகழி வெட்டப்பட்டுள்ளது.

அதை நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்கள் உள்ளன. அதை கவனித்துப் பராமரிப்பது போன்ற விஷயங்களை பஞ்சாயத்து மற்றும் பொதுமக்கள் உள்ளடங்கிய குழுவிடம் ஒப்படைப்பது என பல்வேறு விஷயங்கள் 'களிறு’ திட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன. இது முழுமையடைய குறைந்தபட்சம் 3 ஆண்டுகளாகும். இதற்கு வன உயிரின பாதுகாப்புத் திட்டங்கள் மூலம் வரும் நிதியே பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

15 ஆண்டுகளில் 60 யானைகள் உயிரிழப்பு

தமிழகத்தில் ஆண்டுதோறும் 60-க்கும் மேற்பட்டவர்கள் யானை தாக்கியதால் மட்டும் உயிரிழக்கின்றனர். கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இந்த இறப்பு எண்ணிக்கை அதிகம் என்கின்றனர் வனத்துறையினர். கோவை வனக்கோட்டம் 693 சதுர கிமீ பரப்பளவு கொண்டது. இந்த வனக் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் ஆண்டுக்கு சுமார் 30 பேர், யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தாக்கி இறக்கின்றனர். கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் 60-க்கும் மேற்பட்ட யானைகள் இறந்துள்ளன. இதில், மின்வேலியில் சிக்கி மட்டும் 25 யானைகள் உயிரிழந்துள்ளன.

SCROLL FOR NEXT