முல்லை பெரியாறு அணையில் நேற்று இடுக்கி எம்எல்ஏ தனது ஆதரவாளர்களுடன் அத்துமீறி நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
முல்லை பெரியாறு அணை பகுதியில் ஆய்வு மேற்கொள்ளவோ அல்லது பார்வையிடவோ தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளி டம் அனுமதி பெற வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுகளை சமீபகாலமாக கேரள எம்எல்ஏக்கள் பின்பற்றுவ தில்லை என குற்றச்சாட்டுகள் எழுந் துள்ளன.
கடந்த 6 நாட்களுக்கு முன்பு பீர்மேடு தொகுதி எம்எல்ஏ பிஜுமோல் தனது ஆதரவாளர்கள் 40 பேருடன் திடீரென அணைப் பகுதியில் நுழைந்தார். இதனைத் தடுக்க வந்த தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகளை தாக்கிவிட்டு பேபி அணையை சேதப்படுத்த முயன்றதாக புகார் எழுந்தது. இதற்கு தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சியினர் கடும் கண் டனம் தெரிவித்தனர்.
இந்த பரபரப்பு அடங்குவ தற்குள் நேற்று இடுக்கி தொகுதி எம்எல்ஏ ரோசையா அகஸ்டின் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் 10 பேர் திடீரென படகு மூலம் வந்து அணைப் பகுதிக்குள் நுழைந்தனர். இவர்களைப் பார்த்ததும் தமிழக அதிகாரிகள், அனுமதியில்லாமல் வெளியாட்கள் இங்கு வரக்கூடாது என்று கூறினர். அணையைப் பார்வையிடச் செல்ல வந்ததாக மழுப்பலான பதிலைக் கூறிவிட்டு அணையைப் பார்வையிட்டுச் சென்றனர்.
இது குறித்து ‘தி இந்து’விடம் பொதுப்பணித் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியது: அணைப் பகுதிக்குள் நுழைய எங்களிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால் தற்போது கேரள எம்எல்ஏக்கள் தங்களது ஆதரவாளர்களுடன் அனுமதி இல்லாமல் அத்துமீறி நுழைந்து வருகின்றனர். அணை கட்டப்பட்டுள்ள பகுதி பீர்மேடு தொகுதிக்கு உட்பட்டதாகும். ஆனால் சம்பந்தம் இல்லாமல் இடுக்கி எம்எல்ஏ வந்து செல்கிறார். அணையின் பாதுகாப்பு கேள்விக் குறியாக உள்ளது.
இது குறித்து பாதுகாப்பு பணியில் உள்ள கேரள போலீஸா ரிடம் புகார் கூறினால் அவர்கள் கண்டுகொள்வதில்லை, இது போன்ற சம்பவங்கள் இனி தொடர்ந்து நடைபெறாமல் இருக்க அணை பாதுகாப்புக்கு தமிழக போலீஸார் அல்லது மத்திய தொழில் பாதுகாப்புப் படையை நிறுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.