தமிழகம்

ஆட்சி அமைக்க முடியாத காழ்ப்புணர்ச்சியில் மோடியை சாடுவதா?- கருணாநிதி மீது தமிழிசை சரமாரி தாக்கு

செய்திப்பிரிவு

ஆட்சி அமைக்க முடியவில்லை என்ற காழ்ப்புணர்ச்சியால் நல்லாட்சி செய்துகொண்டு இருக்கும் மோடியை சாடுவதா என திமுக தலைவர் கருணாநிதிக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேர்தல் பரப்புரையை முடித்து ஆட்சி அமைக்க முடியாத ஆத்திரத்தில் ஒரு பொய் உரையை கருணாநிதி பிறந்தநாள் உரையாக ஆற்றி இருப்பது கண்டிக்கத்தக்கது.

ஆட்சி அமைக்க முடியவில்லை என்ற உடன் வலுவான எதிர்க்கட்சி அந்தஸ்தை கொடுத்த மக்கள் ஆடுகளாக மாறிவிடுவார்கள் தங்கள் ஆட்டத்துக்கு ஓட்டு போட்டால் நல்ல ஆட்கள், இல்லை என்றால் ஆடுகள்.

ஆக மக்களுக்காக இன்று கருணாநிதி இல்லை, கருணாநிதிக்காக மக்கள் இருக்க வேண்டும் என்பதே இன்றைய அவரது அரசியல் பார்வை.

கசாப்பு கடைக்காரனை நோக்கி செல்லும் ஆடுகள் என்கிறார் மக்களைப் பார்த்து.

ஆட்சி அமைக்க முடியவில்லை என்ற காழ்ப்புணர்ச்சியில் நல்லாட்சி செய்துகொண்டு இருக்கும் பிரதமர் மோடி மீது பாய்வது தான் வியப்பைத் தருகிறது.

வாய்ப்பு உங்களுக்கு பறிபோனது காங்கிரஸ் தான் காரணம் என்று உங்கள் கட்சியினரே சொன்ன பின்பும் மோடி அவர்களை குறை சொல்லுவது ஏன்?

இன்று நீங்கள் பல இடங்களில் பெற்று இருக்கும் வெற்றி 2ஜி பணபலத்தால் மற்றும் பல இடங்களில் பாஜக வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளைப் பிரித்ததால் பாராளுமன்ற தேர்தலில் ஒரு இடம் கூட கிடைக்காத திமுக கூட்டணி இன்று பல இடங்களில் வெற்றி பெற்றதுக்கு இதுவும் ஒரு காரணம்.

ஆனால் அதிமுக ஆட்சி அமைந்ததற்கு மோடி சொன்ன வாழ்த்தே காரணம் என தவறான கருத்தைப் பரப்புவது கண்டனத்திற்கு உரியது, தனது 93வது பிறந்தநாள் உரையில் அப்பழுக்கற்ற பிரதமரைப் பார்த்து ஜனநாயகத்துக்கு விரோதமாக ஒரு குற்றச்சாட்டு சுமத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது.

10 மணிக்கே மோடி வாழ்த்து சொல்லிவிட்டார். அதனால் இவருக்கு கிடைக்க வேண்டிய வெற்றி பறிபோய்விட்டது என்று புலம்புகிறார்.

பிரதமர் மோடி தமிழக முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டர் பதிவு செய்து இருப்பது சரியாக காலை 11:15 மணிக்கு. இன்று வாக்கு எந்திரம் முலம் எண்ணப்படும் வாக்குகள் விரைவில் எண்ணப்படுகிறது என்பதும் வாக்கு எண்ணிக்கை 8 மணிக்கு தொடங்கி 1 மணி நேரத்திற்கு உள்ளாகவே தேர்தல் முடிவு நிலவரம் அனைத்து தொலைக்காட்சி மற்றும் செய்தி ஊடகங்களில் வருகிறது என்பதும் 10 மணி அளவில் முன்னணி நிலவரம் மட்டுமல்ல 11 மணி அளவில் பல உறுதி செய்யப்பட்ட வெற்றிகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் பிரதமர் 11.15 மணிக்கு தமிழகத்திற்கு வாழ்த்து சொன்னார்.

அவர் இங்கு மட்டுமல்ல அதற்குமுன்னரே 11.14 மணிக்கு மேற்கு வங்கத்திற்கும் 11.23 மணிக்கு அசாம் வெற்றிக்கும் 11.26 மணிக்கு கேரளா நிலவரத்துக்கும் தன் கருத்தைப் பதிவு செய்து இருக்கிறார்.

அப்படி என்றால் எல்லா தேர்தல் முடிவுகளும் அவரது வாழ்த்தால் மாறியதா? சுமார் 18 ஆண்டுகள் மத்திய அரசின் ஆட்சி அதிகாரத்தில் அங்கம் வகித்த கருணாநிதி இதைத்தான் செய்தாரா?

கடந்த காலத்தில் சிதம்பர வெற்றிகள் இப்படிதான் சிதைத்து வாங்கப்பட்டதா என்ற சிதம்பர ரகசியத்தை கருணாநிதி விளக்குவாரா?

தங்கள் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்றபோது நம் மாநிலத்தில் தங்கள் பெற்ற வெற்றிகள் எல்லாம் அத்தகையது தானா?

தமிழகத்தில் வாழ்த்து சொல்லி தேர்தல் முடிவுகளை மாற்ற முடியும் என்றல் மோடி ஏன் டெல்லி சட்டமன்ற முடிவுகளை மாற்றவில்லை பீகாரில் எப்படி எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வந்தார்கள்?

தன் கட்சிக்கு தோல்விகள் வந்த போதும் அதனை தன் தோளில் சுமந்து கொண்டே தன்னலம் இன்றி நாட்டுக்கு உழைத்துவரும் மோடி மீது வீண் பழி சுமத்துவதும் தவறான கருத்துகள் பரப்புவதும் கருணாநிதிக்கு அழகல்ல என்று வலிமையாக எடுத்துக்கூறி வன்மையாக கண்டிக்கிறேன்.

அதுமட்டுமல்ல கண்டெய்னர் லாரிக்கும் பதில் சொல்ல வேண்டியது மத்திய அரசு என்ற தொனியில் பேசுகிறார். அது அரசு வங்கிகளின் பணம் என்று பொறுப்பான உயர் வங்கி அதிகாரிகள் உறுதி செய்துவிட்ட பின்பும் மத்திய அரசு பதில் சொல்லவில்லை என்கிறார். 2ஜி பணம் 1,76,000 கோடிக்கு நீங்கள் இதுவரை உண்மையான பதிலை சொல்லவில்லை.

இன்று வலிமையான எதிர்க்கட்சியாக வந்ததில் 2ஜி பண வலிமையையும் இருக்கிறது என்ற உண்மை உங்கள் மனசாட்சிக்கும், மக்களுக்கும் தெரியும் நீங்கள் வெற்றி பெற்றால் தேர்தல் ஆணைய அலுவலர்கள், யோக்கியர்கள். தோல்வி அடைந்தால் அயோக்கியர்கள்.

வெற்றி பெற்றால் மக்கள், இல்லையென்றால் மந்தை ஆடுகள். தான் கட்டுமரம் மக்கள் நெட்டை மரம். கவிழ்ந்து விடமாட்டேன் என்று சொல்லிவிட்டு பொய்யை கட்டவிழ்த்து கவிழ்ந்து கொண்டு இருக்கிறிர்கள்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் தான் மோடி வாழ்த்து மாற்றி விட்டது என்று பிதற்றினார் நீங்களுமா?

இது கூடா நட்பினால் வந்த சாயமா? தமிழ் மக்களுக்கு வந்த சாபமா? மக்கள் புரிந்து கொள்வார்கள். தமிழ் மக்களுக்காக வாழ்வதாக சொல்லி தற்சமயம் தன் மக்களுக்காக வாழ்ந்து வருவது யாரென்று.''

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT