தமிழகம்

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தை மக்கள் விரும்புவதால் வெற்றி நிச்சயம்: மதுசூதனன் கணிப்பு

செய்திப்பிரிவு

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் அதிகம் விரும்புவதால் எனது வெற்றி திடமாக உள்ளது என்று அஇஅதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சி வேட்பாளர் மதுசூதனன் உறுதிபட தெரிவித்தார்.

அஇஅதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சி (ஓபிஎஸ் அணி) வேட்பாளர் இ.மதுசூதனன், சென்னை தண்டையார்பேட்டை யில் உள்ள மண்டல அலுவல கத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி பிரவீன் பி.நாயரிடம் நேற்று காலை 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அக்கட்சி நிர்வாகி கள், தொண்டர்களுடன் வந்த மதுசூதனன் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தார்.

வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு நிருபர்களிடம் மதுசூதனன் கூறியதாவது:

எம்ஜிஆரின் ஆசி எனக்கு எப்போதும் உண்டு. எம்ஜிஆர் பக்தர்கள் என்னை முழுமையாக ஆதரிப்பார்கள். ஓ.பன்னீர்செல்வம் நியாயமானவர், மக்கள் சேவை யில் முழுமையாக ஈடுபடக் கூடியவர் என்பதால் என்னை விட ஓ.பன்னீர்செல்வத்தை இத்தொகுதி மக்கள் அதிகம் விரும்புகின்றனர். அதனால் எனது வெற்றி திடமாக உள்ளது.

குடும்ப ஆட்சியை எதிர்த்து தான் தர்மயுத்தம் நடத்துகிறோம். சசிகலா குடும்பத்தினர், உறவினர் களை வெளியேற்ற ஒன்று திரள்வோம். எனவே, சசிகலா பக்கம் உள்ள தொண்டர்கள் எங்கள் பக்கம் வரவேண்டும். 1993-ம் ஆண்டுக்கு முன்பு சசிகலா குடும்பத்தினருக்கு இருந்த சொத்து விவரங்களை வெளியிட முடியுமா?

21 ஆண்டுகளுக்குப் பிறகு

மறைந்த முதல்வர் ஜெயலலிதா சாகடிக்கப்பட்டார் என்று மக்கள் கொதிப்பாக உள்ளனர். இதுதொடர்பான உண்மையை கண்டறியவதற்காக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரியுள்ளோம். இந்த விஷயத்தில் உண்மை களை வெளிக்கொண்டு வருவதற் காகவே 21 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தலில் போட்டியிடுகிறேன். இத்தேர்தல் வெற்றிக்குப் பிறகு கட்சியின் தலைமை அலுவலகம், கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தைக் கைப்பற்றுவோம்.

இவ்வாறு மதுசூதனன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT