மெரினா கடற்கரை பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்திருப்பதை திரும்பப் பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஜல்லிக்கட்டு தடையின் காரணமாக தமிழக மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள் உட்பட அனைவரும் வேற்றுமை மறந்து ஒன்றுபட்டு அமைதி வழியில் போராடியதை உலகம் வியந்து பாராட்டி வருகிறது. இப்போராட்டத்தை கலைத்திட காவல்துறை மூலம் அரசு எடுத்த நடவடிக்கை அனைவரும் அறிந்ததாகும்.
போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது கொலைமுயற்சி மற்றும் தேச துரோக வழக்குகள் பதிவு செய்வது பாஜக ஆளும் மாநிலங்களில் பின்பற்றப்படும் நடைமுறையாகும். அத்தகைய தவறான முன் உதாரணத்தை தமிழ்நாடு அரசு பின்பற்ற வேண்டாம்.
காவல்துறையினர் தங்களைத் தற்காத்துக் கொள்ள தொடர்ந்து பீதியைக் கிளப்பி வருகின்றனர். அதனை அரசும் ஏற்கும் விதத் தில் மெரினா பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்திருப்பது தேவை யற்றது. இதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.