தமிழகம்

ரூ.7 லட்சம் கடனுக்காக மகன் கடத்தல்: சென்னையைச் சேர்ந்தவர் மீது பெண் புகார்

செய்திப்பிரிவு

ரூ.7 லட்சம் கடனுக்காக தனது மகனை கடத்தி மிரட்டல் விடுத்ததாக சென்னையைச் சேர்ந்தவர் மீது சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பெண் புகார் செய்தார்.

சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த சுப்ரமணியன் மகள் சியாமளா. இவர் கடந்த 5 ஆண்டுக்கு முன்னர் முகமது யூனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இஸ்லாமிய மதத்துக்கு மாறிய சியாமளா தனது பெயரை சியாமா யாஸ்மின் என மாற்றிக்கொண்டார். திருமணத்துக்கு பின்னர் தனது கணவருடன் சென்னையில் குடியேறினார். இவர்களுக்கு மூன்றரை வயதில் முகமது யாசிப் என்ற மகன் உள்ளார்.

முகமது யூனஸ் சென்னை பட்டினப்பாக்கம் நம்பிக்கை நகரைச் சேர்ந்த பைனான்சியர் சங்கர் என்பவருடன் சேர்ந்து பங்கு சந்தை வியாபாரத்தில் ஈடுபட்டார். இதற்காக சங்கரிடம் ரூ.7 லட்சம் முகமது யூனஸ் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வாங்கிய கடனை கொடுக்காமல் கடந்த 6 மாதத்துக்கு முன்பு முகமது யூனஸ் மலேசியா சென்றார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சியாமா யாஸ்மின் தனது உறவினருடன் சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். புகாரில், தனது கணவர் வாங்கிய கடன் தொகையை கேட்டு சங்கர், தன்னையும், மகன் முகமது யாசிப்பையும் கடத்தி சென்று அவரது வீட்டில் அடைத்து வைத்திருந்தார். கடந்த 10 தினங்களுக்கு முன்பு முகமது யாசிப்பை பிணையமாக வைத்துக்கொண்டு பணத்தை கொண்டுவரும்படி கூறி தன்னை அனுப்பி விட்டார்.

ஆத்தூர் வந்த நான் பணத்துக்காக பல்வேறு இடங்களில் முயற்சி செய்த நிலையில், என்னை செல்போனில் தொடர்பு கொண்ட சங்கர் ஒரு வாரத்துக்குள் ரூ.7 லட்சத்தை திருப்பி தரவேண்டும். இல்லையென்றால் குழந்தையை கொன்று விடுவதாக மிரட்டினார் என்று தெரிவித்திருந்தார்.

குழந்தை மீட்பு

புகாரை தொடர்ந்து சேலம் போலீஸார் சென்னை பட்டினப்பாக்கம் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் சங்கர் வீட்டில் இருந்த குழந்தை முகமது யாசிப்பை போலீஸார் மீட்டனர். மேலும் சியாமா யாஸ்மின், முகமது யூனஸ் இருவரும் சேர்ந்து அந்த பகுதியில் உள்ளவர்களிடம் ரூ.1.50 கோடி வரை மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. மேலும், இதுகுறித்து சங்கர் ஏற்கெனவே, பட்டினபாக்கம் போலீஸில் புகார் செய்திருப்பதும் தெரியவந்தது.

சேலம் போலீஸார் குழந்தையை மீட்டு, பட்டினப் பாக்கம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, பட்டினப்பாக்கம் போலீஸார் சியாமா யாஸ்மின் மற்றும் சங்கரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT