தமிழகம்

மீன்வள படிப்பில் சேர மே 10 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு மீன்வள பல்கலை. துணைவேந்தர் அறிவிப்பு

செய்திப்பிரிவு

மீன்வள படிப்புகளில் சேர மே மாதம் 10-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத் துணைவேந்தர் (பொறுப்பு) கே.ரத்னகுமார் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட ஓர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் பிஎப்எஸ்சி படிப்பில் 50 இடங்களும், திருவள்ளூர் பொன்னேரி மீன்வளக் கல்லூரியில் 60 இடங்களும் உள்ளன.

அதேபோல், நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வள பொறியியல் கல்லூரியில் பி.இ. (மீன்வள பொறியியல்) படிப்பில் 20 இடங்கள் இருக்கின்றன. பிளஸ் 2-வில் உயிரியல் (அல்லது விலங்கியல், தாவரவியல்), இயற்பியல், வேதியியல் பாடங்கள் படித்தவர்கள் மீன்வள படிப்பில் சேரலாம். பிஇ (மீன்வள பொறியியல்) படிப்புக்கு கணிதம், இயற்பியல், வேதியியல் படித்திருக்க வேண்டும். இப்படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. நுழைவுத் தேர்வு எதுவும் கிடையாது.

மீன்வள படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு அரசு கல்வி உதவித் தொகை, முதல் பட்டதாரி கல்வி உதவித் தொகை, மீன்வள பல்கலைக்கழக உதவித் தொகை, சிறந்த எஸ்சி. எஸ்டி மாணவருக்கு முதல்வரின் விருது என பல்வேறு விதமான கல்வி உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன. இவை தவிர, இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் உதவித் தொகையும் உண்டு.

வரும் கல்வி ஆண்டில் (2017-18) மேற்கண்ட படிப்புகளில் சேர மாணவர்கள் மே மாதம் 10-ம் தேதி முதல் ஜூன் 10-ம் தேதி வரை ஆன்லைனில் (www.tnfu.ac.in) விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் ரூ.600-ஐ (எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு ரூ.500) ஆன்லைனிலேயே செலுத்திவிடலாம். அச்சிடப்பட்ட விண்ணப்பங்கள் வழங்கப்படாது. ஆன்லைன் மூலமாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். கல்லூரியை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு ஜூலை முதல் வாரத்தில் நடத்தப்படும்.

தொடர்புக்கு..

மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் மே மாதம் 10-ம் தேதி வெளியிடப்படும். கூடுதல் விவரங்கள் அறிய மாணவர் சேர்க்கைக்குழு தலை வரை 04365-240558 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT