தமிழகம்

தகுதி தேர்வில் வெற்றி பெறாவிட்டால் ஆசிரியர்கள் பணிநீக்கம் என எச்சரித்த அரசு சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

அரசு உதவிபெறும் பள்ளிகளின் இடைநிலை ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் பணிநீக்கம் செய்யப்படுவர் என தமிழக பள்ளிக்கல்வித் துறை பிறப்பித்த சுற்றறிக்கைக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டம் கடந்த 2010 ஆகஸ்ட் 23-ம் தேதி அமலுக்கு வந்தது. இதன்படி, பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிய ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெறவேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் கடந்த 2011 முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. 2011-க்கு முன்பு ஆசிரியர் பணியில் சேர்ந்தவர் கள் 3 ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில் கண்டிப்பாக தேர்ச்சி பெற வேண்டும் என காலக்கெடு விதிக்கப்பட்டது.

இதன்பிறகு 2012, 2013-ல் மொத்தம் 3 முறை ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் 29, 30 தேதிகளில் நடக்க உள்ளது.

இதற்கிடையில், பள்ளிக்கல்வித் துறை கடந்த மார்ச் 1-ம் தேதி ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், ‘‘ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக பணிபுரிபவர் களுக்கு இத்தேர்வுதான் கடைசி வாய்ப்பு. அவர்கள் இத்தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் பணிநீக்கம் செய்யப்படுவர்’’ என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த சுற்றறிக் கைக்கு தடை விதிக்கவும், அதை ரத்து செய்யவும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும்படி தங் களை கட்டாயப்படுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரியும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி புரியும் இடைநிலை ஆசிரியர்களான சரோஜினி, சுதா உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

ஏப்.18-ல் விசாரணை

நீதிபதி டி.ராஜா முன்பு இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. ‘‘ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டா யம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நடைமுறை 2011-ல்தான் அமலுக்கு வந்தது. அதற்கு முன்பே பணியில் சேர்ந்த எங்களுக்கு இந்த நிபந்தனை பொருந்தாது’’ என்று மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, பள்ளிக்கல்வித் துறையின் இந்த சுற்றறிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிபதி, அடுத்தகட்ட விசாரணையை 18-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

SCROLL FOR NEXT