தமிழகம்

காவிரி மேலாண்மை வாரியம் : 50 அதிமுக எம்.பி.க்களும் ராஜிநாமா செய்ய வேண்டும் - மு.க.ஸ்டாலின் கோரிக்கை

செய்திப்பிரிவு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க குரல் கொடுக்காவிட்டால் 50 அதிமுக எம்.பி.க்களும் ராஜிநாமா செய்வதே சரியாக இருக்கும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு தண்ணீர் விட உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டனர். இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. திமுக உட்பட பல்வேறு கட்சிகளும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தன.

சென்னையில் நடந்த முழு அடைப்புப் போராட்டத்தின் போது சாலை மறியலில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் புதுப்பேட்டை சமூக நலக் கூட்டத்தில் தங்க வைக்கப்பட்டனர். மாலை 6 மணி யளவில் ஸ்டாலின் உட்பட கைதானவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

விடுதலையான பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஸ்டாலின் கூறியதாவது:

காவிரி பிரச்சினைக்காக தமிழகத்தில் நடைபெற்ற முழுஅடைப்பு போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. வணிகர்கள், விவசாய சங்கங்கள், லாரி உரிமையாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் என அனைத்துத் தரப்பினரும் இந்த முழு அடைப்பு போராட்டத்தில் முழுமையாகப் பங்கேற்றனர். ஆளும் அதிமுக வைத் தவிர மற்ற கட்சிகள் ஆதரவு அளித்ததால் போராட்டம் முழு வெற்றி பெற்றுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்குப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைக்க மத்திய அரசை 50 அதிமுக எம்.பி.க்களும் வலியுறுத்த வேண்டும்.

இதற்காக குரல் கொடுக்க வில்லை என்றால் அவர்கள் ராஜிநாமா செய்வதே சரியாக இருக்கும். இந்த போராட்டத்துக்கு பிறகும் மத்திய, மாநில அரசுகள் செவிசாய்க்கவில்லை என்றால் போராட்டங்கள் தொடரவே வாய்ப்புகள் அதிகம்.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

SCROLL FOR NEXT