முதல்வர் ஜெயலலிதா சென்னையி லிருந்து செவ்வாய்க்கிழமை நீலகிரி மாவட்டம் கொடநாடுக்கு வருகை தந்தார். அவருடன் சசிகலாவும் வந்துள்ளார்.
தனி விமானம் மூலம் கோவை வந்த முதல்வர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் கொடநாடு வந்தார். கொடநாடு பங்களா நுழைவுவாயில் முன், மாவட்டச் செயலாளர் கலைச்செல்வன், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜுணன், ஆவின் இணைய மாநிலத் தலைவர் அ.மில்லர், உதகை எம்.எல்.ஏ. புத்திசந்திரன், மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ. சின்னராஜ், முன்னாள் மாவட்டச் செயலாளர் பால நந்தகுமார் ஆகியோர் முதல்வரை வரவேற்றனர்.
வழக்கமாக கொடநாட்டுக்கு வருகை தரும் முதல்வருக்கு மேள தாளங்கள், ஆடல், பாடல்களுடன் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிப்பது வழக்கம். ஆனால், செவ்வாய்க்கிழமை எம்.ஜி.ஆரின் நினைவு நாள் என்பதால் இவை அனைத்தும் தவிர்க்கப்பட்டு ஆரவாரமின்றி வரவேற்பு முடிந்தது.
ஒருமாத காலம் கொடநாட்டில் தங்கியிருந்து, அரசுப் பணிகளை முதல்வர் கவனிப்பார் என்றும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி, சேலை மற்றும் பொங்கல் பரிசாக ரூ.500 வழங்கும் திட்டத்தை கொடநாட்டில் தொடக்கிவைப்பார் என்றும் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
யானைகள் முகாம்
மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் யானைகள் நல வாழ்வு முகாமை முதல்வர் ஜெயலலிதா பார்வையிடக்கூடும் என்பதால், கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலை விரைந்து சீரமைக்கப்பட்டு வருகிறது.