தமிழகம்

எம்.ஜி.ஆர். படத்தின் பாடல்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதா?- பேரவையில் அதிமுக - திமுக வாக்குவாதம்

செய்திப்பிரிவு

அதிமுக உறுப்பினர் இ.ரத்தினசபா பதி பாடிய எம்.ஜி.ஆர். படப் பாடல்களுக்கு திமுக உறுப்பினர் கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சட்டப்பேரவையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற மீன்வளம் மற்றும் பால் வளத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் ரத்தினசபா பதி (அறந்தாங்கி), எம்.ஜி.ஆர். நடித்த ஒளிவிளக்கு படத்தில் இடம்பெற்றுள்ள ‘‘ஊதாரிப் பிள்ளைகளை பெக்க மாட்டோம், அது ஊரு வம்பை வாங்கும்படி வைக்க மாட்டோம்..’’ என்ற வரிகளைக் குறிப்பிட்டார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கோஷமிட்டனர். இதனால் அவையில் பெரும் கூச்சல் குழப்பம் நிலவியது. அப்போது அவையை நடத்திக் கொண்டிருந்த பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் திமுக உறுப்பினர்களை அமைதிப் படுத்தினார்.

அப்போது நடைபெற்ற விவாதம்:

அமைச்சர் செல்லூர் கே.ராஜூ:

அதிமுக உறுப்பினர் ரத்தினசபாபதி யாருடைய பெயரையும் குறிப்பிடா மல் பொதுவாக எம்.ஜி.ஆர். நடித்த ‘ஒளிவிளக்கு’ படத்தில் இடம்பெற்ற பாடலைத்தான் குறிப்பிட்டார். இதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டா லின்:

யாரோ எழுதிக் கொடுத்ததற்கு அதிமுக உறுப்பினர் வாயசைத் துக் கொண்டிருக்கிறார். எனவே, அதுபற்றி எங்களுக்கு கவலை யில்லை.

செல்லூர் ராஜூ:

யாரோ எழுதிக் கொடுத்த வரிகளுக்கு அவர் வாயசைக்கவில்லை. தான் நடித்த திரைப்படங்களில் சமூக அக் கறையுடன் தத்துவப் பாடல்களை இடம் பெறச்செய்தவர் எம்.ஜி.ஆர். அந்தப் பாடல் வரிகளைத்தான் ரத்தினசபாபதி சுட்டிக்காட்டினார்.

மு.க.ஸ்டாலின்:

பேரவையில் இதுபோன்ற நிலை நீடித்தால் நாங்களும் பழைய பாடல்களைப் பாட வேண்டிவரும். வேண்டு மானால் இதுபோன்ற பாடல்கள் பற்றி தனி விவாதம் நடத்தலாம். அதற்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.

அமைச்சர் டி.ஜெயக்குமார்:

அதிமுக உறுப்பினர் இங்கே குறிப்பிட்ட படப் பாடல் திமுகவில் எம்.ஜி.ஆர். இருக்கும்போது வெளியானது. அதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்? எம்.ஜி.ஆர். தனது படங்களில், ‘தூங்காதே தம்பி தூங்காதே...’ போன்ற ஏராளமான தத்துவப் பாடல்களை அறிமுகப்படுத்தினார். ஆனால், ‘பராசக்தி’ படத்தில் நீங்கள் வேறு விதமான பாடல்களை அறிமுகப்படுத்தினீர்கள்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நடித்த ‘ஒளி விளக்கு’ படத்தை பலமுறை பார்த்துள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

பேரவையில் நடந்த விவாதத்தின்போது, ‘எம்.ஜி.ஆர். படப் பாடலுக்கு திமுகவினர் ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்?’ என்று அமைச்சர் ஜெயக்குமார் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், ‘‘திமுக பொருளாளராக எம்.ஜி.ஆர். இருந்தபோது ‘ஒளி விளக்கு’ படம் வெளியானது. அந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்களை நாங்கள் எதிர்க்கவில்லை. நானே இப்படத்தை மகாராஜா திரையரங்கில் பலமுறை பார்த்திருக்கிறேன்’’ என்றார்.

SCROLL FOR NEXT